பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் ரவுடி!-போலீஸ் மெளனம்!!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகும் பிரபல ரவுடி இளம் பெண்களை பாலியல்ரீதியில் துன்புறுத்தி வருகிறான். ஆனால், இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்த ரத்தனசாமி, நோய் வயப்பட்ட நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரது மனைவி ஹரிசலம். இவர்களுக்கு சோபி எனற மகள் உள்ளார்.
ரத்தினசாமியின் வீடு மற்ற வீடுகளில் இருந்து சற்று தொலைவில் விலகியுள்ளது.
இவர்களுக்கும் மாடசேரி பகுதியை சேர்ந்த ராஜன் என்ற ஜோஸுக்கும் இடையே முன் பகை இருந்து வந்தது. இவன் குமரி மாவட்டத்தின் பிரபல ரவுடி என்பதும், மாவட்டத்தின் பல்வேறு ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் இருப்பதும் கடந்த சில ஆண்டுகலுக்கு முன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவன் நள்ளிரவு 12.30 மணிக்கு ரத்தனசாமி வீட்டிற்குள் புகுந்து ஹரிசலத்தின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதோடு சோபியை பாலியல்ரீதியில் துன்புறுத்தினான்.
சோபி மற்றும் ஹரிசலம் ஆகியோர் உதவி கேட்டு அலறவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால், ராஜனின் கையில் கத்தி இருப்பதை கண்டு அருகில் நெருங்கவில்லை. இதையடுத்து அவன் அங்கிருந்து சாகவசமாக தப்பி சென்றுள்ளான்.
இதேபோல அப்பகுதியில் வயதான பெற்றொர்கள் இருக்கும் மேலும் 3 வீடுகளுக்கும் புகுந்து இளம் பெண்களை பாலியல் தொந்தரவு செய்துள்ளான்.
இதுகுறித்து ஹரிசலம் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரோ ரவுடி ராஜன் மீது வீடு புகுந்து மிரட்டியதாக மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் பாலியல் தொந்தரவு வழக்கு பதிவு செய்யவில்லை.
மேலும் ஹரிசலம் புகார் கொடுத்து 5 நாட்கள் ஆகியும் இதுவரை ராஜனை கைது செய்யவும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் போலீசார் மீது இப் பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ரவுடி ராஜன் புதுக்கடை போலீசாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதால் போலீசார் அவன் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications