நாஞ்சில் சம்பத்துக்கு மண்டையில் அரிவாள் வெட்டு- எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் அராஜகம்!
திருச்சி: கரூர் மாவட்டம் குளித்தலையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்திற்குள் புகுந்த திமுகவினர் சரமாரியாக தாக்கியதில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.
சம்பத்துக்கு மண்டையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் வந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் மதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசத் தொடங்கியபோது திடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கத் தொடங்கியது. பொதுமக்கள், மதிமுகவினர், காவல்துறையினர் கண் முன்பாகவே சரமாரியாக தாக்குதல் நடத்தினர் திமுகவினர்.
உருட்டுக் கட்டைகள், சோடா பாட்டில்களுடன் வந்து தாக்குதல் நடத்தினர். மேடையில் இருந்த டியூப் லைட்டுகள் உடைக்கப்பட்டு, மேடையில் அமர்ந்திருந்தவர்களை அக் கும்பல் தாக்கியது.
சம்பத் மீது விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற கரூர் நகர மதிமுக செயலாளர் பல்லவி ராஜன், இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன், பரமத்தி யூனியன் துணைத் தலைவர் பரணிமணி உள்ளிட்டோருக்கும் சரமாரியாக அடி விழுந்தது.
மேடையில் வெறியாட்டம் ஆடிய கும்பல் பின்னர் அங்கிருந்த பொருட்களையும் தாக்கி சேதப்படுத்தியது. பின்னர் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள பேராளம்மமன் கோவில் தெருவுக்குச் சென்ற அக்கும்பல் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கியது.
இந்த நிலையில் ஆம்புலன்ஸுக்கு மதிமுகவினர் போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ வரவில்லை. இதையடுத்து சாலை மறியலில் அவர்கள் குதித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்தது.
அதன் பின்னர் சம்பத் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பத் உள்பட 11 பேர் காயமடைந்தனர். பலருக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இது அப்பட்டமான கொலை முயற்சி என்று சம்பத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் திமுக எம்.எல்.ஏ தலைமையில் வந்தது. டியூப் லைட்டுகளை முதலில் உடைத்தனர். பின்னர் எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
பெரிய பெரிய கட்டைகள், பாட்டில்கள், செங்கற்களுடன் அவர்கள் தாக்கினர். இது என்னைக் கொல்ல நடந்த முயற்சி. மதிமுகவை அழிக்க முயலும் அவர்களுக்கு நிச்சயம் தோல்விதான் கிடைக்கும். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது என்றார் சம்பத்.
போர்க்களமான பொதுக்கூட்ட மேடை:
திமுகவினர் தாக்குதல் நடத்திய இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. தெரு விளக்குகள் உடைக்கப்பட்டிருந்தன. மேடையில் வீசி எறியப்பட்டு உடைந்த சோடா பாட்டில்களின் துகள்கள் கிடந்தன.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமர்ந்த இருக்ைககள் தாறுமாறாக சிதறிக் கிடந்தன பல இருக்கைள் உடைந்து போயிருந்தன.
அப்பகுதி வழியாக வந்த சில பஸ்கள் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த சில பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன. பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு:
இந் நிலையில் மதிமுகவினர் தந்த புகாரின் பேரில் மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க குளித்தலையில் பலத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications