காதல் கடிதங்கள்- கைதி கணேசன்-நதியா உறவு அம்பலம்!
வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்தவர் நதியா.
கணேசன் கற்பழிப்பு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்த இருவரையும் வைத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனது மனைவி நதியாவை சிறை துணை ஜெயிலரும், வார்டர்களும் சேர்ந்து கற்பழித்து விட்டதாகவும், மனைவியை தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார் கணேசன்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி நதியாவை திருப்பூரிலிருந்த மீட்டு உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு தனது மகளுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று நதியாவின் தாயார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். போலீஸார் தாக்கல் செய்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், நதியா கன்னி கழியாதவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கணேசனையும், அவரது வழக்கறிஞர்களையும் கண்டித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.
இந் நிலையில் நதியாவும், கணேசனும் கல்யாண கோலத்தில் இருப்பதைப் போன்ற புகைப்படங்களும், கணேசனுக்கு நதியா எழுதியுள்ள கடிதங்களும் வெளியாகியுள்ளன.
உண்மை கண்டறியும் குழு:
இதற்கிடையே, நதியா - கணேசன் விவகாரத்தில் புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கொண்டு வர வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த், துணைப் பொதுச் செயலாளர் கனகவேல், வழக்கறிஞர் தமயந்தி, அறிவியலாளர் கோபால், புதுவை சுகுமாறன், தமிழினியன், ஜாகீர் அகமது உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் கணேசன் ஊருக்குச் சென்று அவரது தாயார் மற்றும் உறவினர்கள், நதியாவின் ஊருக்குச் சென்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் குழுவில் இடம் பெற்றிருந்த 5 வக்கீல்கள் மட்டும் கணேசனை சந்தித்து விசாரணை நடத்த வேலூர் சிறைக்குச் சென்றனர். ஆனால் மாலை வரை அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கணேசன் உங்களை சந்திக்க விரும்பவில்லையாம் என்று வக்கீல்கள் குழுவிடம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர் சிறை அதிகாரிகள்.
இதைடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர் வக்கீல்கள். இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி கணேசனை சந்திக்க அனுமதி வாங்கப் போவதாக கூறியுள்ளனர்.
குழுவில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர் ஹரிபாபு கூறுகையில், நதியா விஷயத்தில் பல உண்மைகள் மறைந்துள்ளன. கணேசனின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகவுள்ளோம். சிபிஐ விசாரணையும் கோரவுள்ளோம். விரைவில் கணேசனை சந்தித்து உண்மைகளை சேகரித்து மக்கள் முன் வெளியிடப் போகிறோம் என்றார் அவர்.
நதியா, கணேசன் விவகாரத்தில் அடுத்து வரும் தகவல்களால் இந்த வழக்கு பல உண்மைகளை வெளிக் கொண்டு வரும் என்று தெரிகிறது.













Click it and Unblock the Notifications