இலங்கை தாக்குதல்: பிரதமருக்கு கருணாநிதி அவசர கடிதம்

ராமேஸ்வரம் மீனவர் கிறிஸ்டி சுட்டுக் கொல்லப்பட்டது, குமரி மாவட்ட மீனவர்கள் கடத்தப்பட்டது ஆகியவற்றை சுட்டிக் காட்டி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்திய கடல் எல்லைப் பகுதியில், கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பை தீவிரப்படுத்த உரிய உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ரோந்துப் பணியும் கூடுதலாக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 30ம் தேதியும் நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையின் வான் கண்காணிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், அதி நவீன விமானங்கள், கப்பல்கள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்ேதன்.
ஆனால் இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று கூட ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 62 மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற தொடர் தாக்குதல்கள், தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், நிம்மதியின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற அட்டகாச செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம், அவசரம் ஏற்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதி முழுவதையும், அது எந்தப் பிராந்தியத்தின் கீழ் வருகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
தூத்துக்குடியில் ஹெலிகாப்டருடன் கூடிய கண்காணிப்பு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். இதன் கட்டுப்பாட்டை கிழக்குப் பிராந்தியத்தின் வசம் ஒப்படைக்கலாம்.
மேலும் கன்னியாகுமரியில், கடலோரக் காவல் படையின் நிலையத்தை அமைத்து, அதி நவீன ரோந்து வாகனங்கள் மற்றும் படகுகளை இடைமறித்து சோதிக்கும், விசாரிக்கும் வசதியுடன் கூடிய படகுகளையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.
மத்திய பாதுகாப்புத் துறையும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் எடுத்து, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சர்வதேச எல்லையைத் தாண்டி செல்ல வேண்டாம் என்று பலமுறை அரசு கூறினாலும் கூட, மீன்வளம் உள்ள பகுதிக்கே மீனவர்கள் செல்லும் நிலைமை உள்ளது.
கச்சத்தீவு அருகில்தான் மீன்வளம் நிறைய உள்ளது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி தலமாகவும் அது விளங்கி வருகிறது.
எனவே சமயங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டால், அவர்களை சர்வதேச சட்டங்களின் கீழும், மனிதாபிமான முறையிலும் இலங்கை கடற்படை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். மீனவர்களை சுடுவது, தாக்குவது போன்ற வன்முறைகளில் ஈடுபடக் கூடாது.
எனது இந்த யோசனைகளை தாங்கள் போர்க்கால அடிப்படையில் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், இலங்கை கடல் எல்லைக்குள் வழி தவறி நுழையும் தமிழக மீனவர்களிடம் வன்முறையைக் காட்ட வேண்டாம் என இலங்கைக் கடற்படைக்கு அறிவுறுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுக்கு அறிவுரை கூற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இன்னொரு புதிய பிரச்சினையாக இலங்கையைச் சேர்ந்த இலங்கை வடக்கு பிரதேச பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பு தமிழக மீனவர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் நுழையக் கூடாது, நுழைந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அது எச்சரித்துள்ளது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை இந்தியா வற்புறுத்த வேண்டும்.
இலங்கையின் செயல்களைக் கண்டித்து தமிழக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் இந்த நிலைமை மோசமடைந்து வருவதை மத்திய அரசு உணர வேண்டும். எனவே தமிழக கடலோரப் பகுதிகளில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதை உணர்ந்து உரிய உத்தரவினை பிரதமர் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கருணாநிதி.
--












Click it and Unblock the Notifications