பாஜகவில் பயங்கர கோஷ்டி மோதல்- அடிதடியில் 2 பேர் படுகாயம்

இதில் இரு தொண்டர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியில் நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் இந்த சண்டை நடந்துள்ளது. முன்னதாக கணேசனை ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு பேராட்டம் நடத்திய சம்பவமும் நடந்தது.
சமீபத்தில் கோவை கிழக்கு மண்டல பாஜக தலைவராக இருந்த ராஜன், குனியமுத்தூர் மண்டல தலைவர் ராமமூர்த்தி, தொண்டாமுத்தூர் மண்டல தலைவர் மணிவண்ணன் ஆகியோர் பதவி நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் ஆவர்.
இவர்களுக்கு பதிலாக புதிதாக நியமனம் ஆனவர்கள் இல.கணேசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்.
இந் நிலையில் இல.கணேசன் கோவை வந்தார். அவரை சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் நகரத் தலைவர் சவுந்தர்ராஜன், ராஜன் உள்ளிட்டோர் முற்றுகையிட்டதோடு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
கட்சியினர் முன்னாள் மாநிலத் தலைவரே இப்போதைய தலைவரை முற்றுகையிட்டு கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடிதடி:
இதை சற்றும் எதிர்பாராத கணேசன், ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி தனக்கு புக் செய்யப்பட்ட ஹோட்டல் அறைக்குச் சென்றார்.
அவரை சி.பி.ராதாகிருஷ்ணனும், அவரது ஆதரவாளர்களும் பின் தொடர்ந்து சென்றனர். இல.கணேசனின் அறைக்குள் ஆவேசமாகப் புகுந்தனர். அங்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், இல.கணேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
அதே போல இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியது.
இந் நிலையில் இரு தரப்பும் ஒருவரை ஒரு அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இந்த அடிதடியில் தர்மராஜ், ராஜன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
காது கிழிந்து, மூக்கு உடைந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சண்டை குறித்து கேள்விப்பட்ட போலீசார் அங்கு விரையவே, பாஜகவினர் தங்களுக்குள்ளாகவே சமாதானமாகி கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications