சென்னை சில்க்ஸ் நிறுவனங்களில் அதிரடி ஐடி ரெய்டு
சென்னை: புகழ் பெற்ற சென்னை சில்க்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
முன்பு குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் இருந்த நிறுவனம்தான் சென்னை சில்க்ஸ். தற்போது தி சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் பிரமாண்ட ஜவுளி நிறுவனங்களுடன் திகழ்கிறது.
இதுதவிர சென்னையில் தி சென்னை சில்க்ஸ் நகை மாளிகை மற்றும் கோவை, திருப்பூர், ஈரோட்டில் குமரன் தங்க மாளிகை என நகைக் கடைகளையும் வைத்துள்ளது.
இந்த நிறுவனம் தனது வருமானம் குறித்து வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு தாக்கல் செய்வதில்லை என்ற புகார் இருந்து வந்தது.
இதையடுத்து நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து நகரங்களிலும் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் மட்டும் 30 பேர் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நீடித்தது. இன்று காலையும் சோதனை முடியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த சோதனையில் என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்களை வருமான வரித்துறை தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications