விலைவாசி: அரிசி ஏற்றுமதிக்கு தடை
டெல்லி: நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதே போல பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவு தானியங்கள், அரிசி கோதுமை, சமையல் எண்ணை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு நாட்டில் பண வீக்கமும் 6.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வை ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் அரசுக்கு தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என்ற முடிவுக்கு இடதுசாரிகள் வந்துள்ளன.
மேலும் பாஜகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த தயாராகி வருகிறது. இந்த ஆண்டு 7 சட்டசபை தேர்தல்களையும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள மத்திய அரசு மிக லேட்டாக விழித்துக் கொண்டுள்ளது.
வழக்கமாக பங்குச் சந்தையைப் பற்றியே கவலைப்படும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இப்போது விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
வரி கட்டும் மாத சம்பளக்காரர்களையும் தொழில் நிறுவனங்களையும் மட்டுமே மேலும் மேலும் பிழிந்து வரி வருவாயை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிதியமைச்சர் ப.சிதம்பரமும் இப்போது சிக்கலில் உள்ளார்.
விலைவாசியைக் கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரசுக்கு பெரும் தோல்வி நிச்சயம் என்ற நிலைமை உருவாகிவிட்டதையடுத்து கடைசி நேரத்தில் பயர்-பைட்டிங் போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
இது குறித்து பிரதமர் தலைமையில் விலைவாசி தொடர்பான அமைச்சர்கள் குழுக் கூட்டம் நடந்தது.
சுமார் 3 மணி நேரம் நடந்த காரசார விவாதத்திற்குப் பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பாமாயில், சோயா எண்ணைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அதன் மீதான இறக்குமதி வரி 20 சதவீதமும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
பாசுமதி அரிசி தவிர, மற்ற ரக அரிசிகளை ஏற்றுமதி செய்ய உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
பருப்பு வகைககள் ஏற்றுமதிக்கான தடை இன்று முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
நெய், வெண்ணை ஆகியவை மீதான சுங்க வரி 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்படும். ரிபைன்ட் எண்ணெய் இறக்குமதிக்கு வரி குறைக்கப்படும். ரீபைன்டு எண்ணெய்கள் மீதான வரி விகிதம் 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.
மாநில அரசுகள் இரும்பு உள்ளிட்டவற்றின் விலையை கட்டுப்படுத்துமாறு அதன் உற்பத்தியாளர்களை மாநில அரசுகள் கேட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படும்.
இரும்பு உள்ளிட்டவை மீதான வரியைக் குறைப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை. அத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் வந்த பிறகு அதுகுறித்து விவாதிக்கப்படும்.
இந்த முடிவுகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துவிட்டதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளால் விலைவாசி குறையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் அப்படித்தான் நம்புகிறேன் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications