சுடரை சச்சின் ஏற்பு: சீனா கோரிக்கையை இந்தியா நிராகரிப்பு
டெல்லி: ஒலிம்பிக் சுடரை இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ஏற்றுச் செல்கிறார். சுடருக்கு பாதுகாப்பாக சீன ராணுவ கமாண்டர்களை அனுமதிக்க இந்தியா மறுத்துவிட்டது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தியர்கள் இந்த போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்புதெரிவித்து உலகளாவிய போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தொடங்கிய ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் சுடர் ஏற்றி வலம் வரத் தொடங்கியபோதே அதைக் கைப்பற்றி அணைக்க சில திபெத்தியர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு
லண்டனில் ஒலிம்பிக் சுடரை அணைக்க முயன்றபோது திபெத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதேபோல பிரான்ஸ் நாட்டில் பாரிஸிலும் ஒலிம்பிக் சுடர் சென்றபோது திபெத்தியர்கள் 1000 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 2 இடங்களில் சுடரை போராட்டக்காரர்கள் அணைத்ததாக கூறப்படுகிறது. திபெத் பிரச்னை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்ஸ் கலந்து கொள்வது பற்றி யோசிப்பதாக அந்நாட்டு அதிபர் சர்கோஸி தெரிவித்த கருத்தால் ஏற்கெனவே சீன அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் நடந்ததால் சீனா கடும் கோபத்தில் உள்ளது.
தற்போது ஒலிம்பிக் சுடர் நாளை அமெரிக்கா செல்கிறது. சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி செல்லப்படுகிறது. அங்குஉள்ள கோல்டன் பிரிட்ஜ் பகுதியில் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திபெத்தியர்கள் முடிவு செய்து உள்ளனர்.
கிரீஸ், லண்டன், பாரீசில் நடந்தபோல் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சான் பிரான்சிஸ்கோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு வரும் 17-ந்தேதி வருகிறது. முன்னதாக இந்த சுடரை ஏந்தி செல்லப் போவதாக இந்திய கால்பந்து அணி கேப்டன் பூட்டியா அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் திபெத் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சுடரை ஏந்திச் செல்ல அவர் மறுத்து விட்டார்.
இதனால், ஒலிம்பிக் சுடரை கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்து உள்ளது. டென்னிஸ் வீரர் லியாண்டர்பெயஸ், இந்தி நடிகர் சயிப் அலிகான், நடிகை சோகா அலிகான், முன் னாள் ஒலிம்பியன் மில்காசிங், கோல்ப் வீரர் ஜோதி ரந்த்வா, கோபிசந்த், அஞ்சுஜார்ஜ் ஆகியோரும் ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
திபெத் மதகுரு தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு இந்தியா என்பதால் ஒலிம்பிக் சுடர் ஒட்டத்தில் அதிக இடையூறு இருக்கலாம் என்று சீன கருதுகிறது. இதையடுத்து தமது ராணுவ கமாண்டர்களை சுடருக்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கு இந்தியாவிடம் சீன அரசு கோரியது. ஆனால் இதற்கு இந்தியா மறுத்துவிட்டது.
மேலும், சுடருக்கு பாதுகாப்பாக தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினர் செல்வார்கள். 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு சுடர் எடுத்துச் செல்லப்படும். தேவைப்பட்டால் வான்வழி கண்காணிப்பும் ஈடுபடுத்தப்படும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா உறுதியளித்தார்.
இந்த சுடர் ஓட்டம் முதலில் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீபெத்தியர்களின் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு கருதி ஒலிம்பிக் சுடர் ஓட்டம் டெல்லியில் 2 முதல் 3 கிலோ மீட்டராக குறைக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications