தமிழக நதிகளை இணைக்க திட்டம் - துரைமுருகன் தகவல்
சென்னை: தமிழகத்திற்குள் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
முதல் கட்டமாக காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும். அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும். பென்னையார்-செய்யார் ஆறுகளும் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படும்.
தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் இணைப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையும், காவிரி-வைகை-குண்டார் இணைப்புக்கான முதல் பகுதி திட்ட அறிக்கையும் முழுமை அடைந்துள்ளது.
காவிரி-வைகை-குண்டார் இணைப்புக்கான இரண்டாவது பகுதி திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளது. பென்னையார்-செய்யார் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்ைக ஜூன் மாதத்திற்குள் தயாராகி விடும்.
ஒருங்கிணைந்த நீர்ப்பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. எனவே இந்த மூன்று நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பான விரிவான அறிக்கைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்படும்.
பட்ஜெட்டில், தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் இணைப்புத் திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.369 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
காவிரியின் குறுக்கே கட்டளை கதவணை ரூ. 165 கோடி செலவில், முழு அளவில் மாநில அரசின் நிதியுதவியேயே கட்டப்படும்.
தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற முயல வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். அந்த முயற்சிகளை எதிர்காலத்திலும் தொடருவோம்.
காவிரியை நவீனப்படுத்த குழு
காவிரி ஆற்றை புதுப்பிக்கவும், நவீனப்படுத்தவும் மூத்த பொறியாளர் மோகனகிருஷ்ணனை ஆலோசகராகக் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவின் தலைவராக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் செயல்படுவார்.
இந்தக் குழு காவிரியை புதுப்பிப்பது, நவீனமாக்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்து ஜூலை மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வெளியிலிருந்து திரட்டுவது குறித்து அரசு பின்னர் யோசிக்கும்.
காவிரியை புதுப்பிப்பது குறித்த கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால் காவிரி நதி நீர்ப் பிரச்சினை நடுவர் மன்றத்தில் இருந்து வந்ததால் இதை செய்ய முடியாத நிலையில் அரசு இருந்தது. தற்போது காவிரி நீர்ப் பிரச்சினை இறுதிக் கட்டத்ைத எட்டி விட்டதால், இந்தத் திட்டத்தை தொடங்க அரசு தீர்மானித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகள் இயற்கையாக உருவானவை ஆகும். காவிரி ஆறு, 35 கிளை ஆறுகளாக பிரிந்து, 10 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications