தமிழகத்தில் மது, சிகரெட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: அன்புமணி
சென்னை: மதுபானங்கள், சிகரெட்டை தமிழ்நாட்டில் முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இந்திய தொழில் சம்மேளனம் சார்பில் நடந்த 'தமிழக முன்னேற்றம்' பற்றிய கருத்தரங்கில் தமிழக சுகாதார வளர்ச்சி என்ற தலைப்பில் அமைச்சர் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பணிகள் பாராட்டுக்குரியது. மதுபானங்கள், சிகரெட் போன்ற போதை வஸ்துகள் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி எனது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் பாடுபட்டு வருகிறார். அவரது கருத்தை நானும் ஆதரிக்கின்றேன்.
குஜராத், காஷ்மீர், மிசோராம், மணிப்பூர் போன்ற மாநிலங்கள் தவிர ஏனைய மாநிலங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுபான விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று இந்திய அரசியலைப்பு சட்ட விதி 47 வலியுறுத்துகிறது. இந்த விதியை எல்லா மாநிலங்களும் பின்பற்றவேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டியது மாநிலங்களின் கடமையாகும். அதை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
எனவே தமிழகத்தில் விரைவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன். அதேபோன்று சிகரெட் மற்றும் போதை வஸ்துகளுக்கும் இம்மாநில அரசு தடைவிதிக்க வேண்டும்.
நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக 25 லட்சம் செவிலியர்களை நாடுமுழுவதும் நியமிக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அன்புமணி.


Click it and Unblock the Notifications
