மீண்டும் மதவாத ஆட்சி வேண்டாம்-கருணாநிதி
சென்னை: மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், அத்வானியின் சுற்றுப்பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும். இந்தியாவில் மதவாத சக்தி இல்லாத ஓர் ஆட்சி உருவாக வேண்டுமென்றால், அது காங்கிரஸ் கட்சியால்தான் முடியும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சாதாரண மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்தால் விலை உயர்வு ஒரு சுமையாக இருக்காது. எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதார கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில், விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர். அவர்கள் பேசியதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
விலைவாசி உயர்வு என்பது ஆளுங்கட்சிக்கு பிடித்தமானது; எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்காத ஒன்று என்பதல்ல. விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் விலைவாசியின் சுமை தெரியாது என்பது ஒரு பொருளாதாரக் கணக்கு.
ஒரு காலத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,000ஆக இருந்தது.
இப்போது, ரூ.10,000 என்ற அளவுக்கு சகட்டுமேனி உயர்ந்துள்ளது.
எனவே, சாதாரண மக்களை வாங்கும் சக்தி உள்ளவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். விலை உயர்வு பிரச்சனை தேர்தலில் பயன்படுத்த மட்டுமே உதவும். மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அத்தகைய பொருளாதாரத்தை நாடு கடைப்பிடிக்க வேண்டும்; அப்படி கடைப்பிடித்தால் விலைவாசியால் பெரும் பாதகம் ஏற்பட்டுவிடாது.
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மாநில அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வது முறையல்ல.
காந்தியை கொன்ற பாவிகளின் ஆட்சி..:
காந்தியை கொன்ற பாவிகளின் ஆட்சி வந்து விடக் கூடாது. மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், அத்வானியின் சுற்றுப்பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும். இன்றைக்கு இந்தியாவில் மதவாத சக்தியாக இல்லாத ஓர் ஆட்சி உருவாக வேண்டுமென்றால், அது காங்கிரஸ் கட்சியால்தான் முடியும்.
மதவாதமற்ற, மனிதநேயமிக்க ஆட்சி வர வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. அந்த கருத்துக்களின் ஒற்றுமையில் தான் எதிர்கால இந்தியா வாழ முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக அணுசக்தி விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பணியை ஓரளவு நான் ஏற்றுக் கொண்டிருந்தேன். இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. எல்லாருக்கும் தெரியும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications