சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி - ஷேவாக் அணியும் வென்றது

மொகாலியில் நேற்று சென்னை கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடந்தது.
டாஸ் வென்ற டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பார்த்திவ் படேல், மாத்யூ ஹெய்டன் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஹெய்டன் 25 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். படேல் 15 ரன்களில் வீழ்ந்தார்.
ஆனால் மைக்கேல் ஹூஸே அதிரடியாக ஆடி அரங்கத்தை அதிர வைத்தார். சரமாரியாக ரன்களை விளாசிய அவர் சதம் போட்டு அசத்தினார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 54 மட்டுமே. டுவென்டி 20 வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் போட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் ஹுஸே பெற்றார்.
கேப்டன் டோணி 2 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ் ரெய்னா 32 ரன்களும், பத்ரிநாத் 31 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 240 ரன்கள் எடுத்தது சென்னை அணி.
பின்னர் இறங்கிய யுவராஜ் சிங் தலைமையிலான பஞ்சாப் அணி சென்னைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடத் தொடங்கியது. ஹோப்ஸ் 71 ரன்களை விளாசி விருந்தளித்தார். கோயல் 24 ரன்கள் சேர்த்தார்.
சங்கக்காரா 54 ரன்களை வேகமாக சேர்த்து வெளியேறினார். யுவராஜ் சிங் 23 ரந்களை சேர்த்தார்.
சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய யுவராஜ் சிங்கின் அணி இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ரன்களில் ஆட்டமிழந்தது.
அதிரடியாக ஆடிய ஹூஸே ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.
ஷேவாக் அணிக்கு வெற்றி:
டெல்லியில் நடந்த 3வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. டெல்லி பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் வீரர்கள் வேகமாக பெலிவிலியன் திரும்பினர்.
குறிப்பாக கிளென் மெக்ராத், மகரூப் ஆகியோரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. 20 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடிய ராஜஸ்தான் அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ரவீந்திர ஜடேஜா 29 ரன்கள் சேர்த்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். ஷேன் வாட்சன் 21 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் ஆடிய டெல்லி அணியில், ஷேவாக் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும் கெளதம் காம்பீர், தவான் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
15.1 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து டெல்லி அணி 132 ரன்களை சேர்த்து வெற்றி இலக்கைத் தொட்டது. கம்பூர் 58 ரன்களுடனும், தவான் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்றைய போட்டியில் கொல்கத்தாவில், கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வி.வி.எஸ்.லட்சுமண் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பையில் நடைபெறும் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இன்றைய போட்டியில் சச்சின் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இன்னும் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. எனவே அவர் விளையாடுவது குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications