குதிரை பேரம்.. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் முன்ஜாமீன் மனு.. போலீஸுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி தருவதாக கூறி குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பதிலளிக்க காவல்துறை அவகாசம் கோரியதால், விசாரணையை வரும் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை ஐகோர்ட்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான தவெகவை சேர்ந்த இளையராஜாவை சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கூறி ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக இளையராஜா காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நடேசன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரும் தொடர்புடையவர் என்று தெரிவித்துள்ள போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அசோக் குமார் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தவெக எம்எல்ஏ இளையராஜாவை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை. பேரம் பேசியதாகவோ மிரட்டல் விடுவதாகவோ எந்தவிதமான புகாரும் என் மீது குறிப்பிடப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லை என்பதால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் என்ற ஒரே காரணத்திற்காகவே என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த நிபந்தனை விடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சி. குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது தமிழ்நாடு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை தரப்பில் வாதிடுகையில், "இந்த வழக்கில் பதிலளிப்பதற்கு தங்களுக்கு அவகாசம் வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அப்போது காவல்துறை தரப்பில் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.














Click it and Unblock the Notifications