சும்மா கிடந்த சங்கை.. ஊதிக் கெடுத்த செந்தில் பாலாஜி! ஸ்டாலினுக்குத் தான் தலைவலி! அலறும் அறிவாலயம்!
சென்னை: செந்தில்பாலாஜி & கோ தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலி திமுகவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவு தரும்படி ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரின் பெயர்களைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குதிரை பேரம்
இதையடுத்து, அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் திமுகவுக்குள்ளும் இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள்,"செந்தில் பாலாஜியைச் சுற்றிய சர்ச்சைகள் புதிதல்ல என்பதே. அதிமுகவில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்தது. பின்னர் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு திமுகவில் இணைந்தாலும் அந்த சர்ச்சைகள் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
செந்தில் பாலாஜி
திமுகவில் இணைந்த பிறகு அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று, பின்னர் கரூர் தொகுதியில் வென்று அமைச்சரான செந்தில் பாலாஜி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை போன்ற முக்கிய துறைகளை கவனித்தார். அந்த காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம், பார்கள், கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகார், தேர்தல் பிரசாரத்திலும் முக்கிய பிரச்சனையாக மாறியது.
டாஸ்மாக் நிர்வாகம்
இந்த விவகாரம் கட்சிக்கும் அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதோடு, உள்ளூர் நிர்வாகிகளிடையே அதிருப்தி உருவானது. அதேபோல், டாஸ்மாக் நிர்வாகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இதனால் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தியை சமாளிக்க தேர்தலுக்கு முன்பு நிர்வாகிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டாலும், அது முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல்
இதற்கிடையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் புதிய பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளன. தவெக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, பல்வேறு பிரச்சனைகளும் அரசியல் காய் நகர்த்தல்களும் நடைபெற்றது. அந்த சூழலில் அதிமுக மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்
இந்நிலையில் தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக கிளம்பியுள்ள இந்த வழக்கில், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு திமுகவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெற்றிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் செந்தில் பாலாஜி தரப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறியிருந்தார்.
திமுக
இந்நிலையில், திமுகவுக்குள் சில நிர்வாகிகள் இந்த விவகாரம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய நேரத்தில் இத்தகைய சர்ச்சைகள் கட்சியின் கவனத்தை திசைதிருப்புவதாகவும் அவர்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், செந்தில் பாலாஜி தரப்பினருக்கு நெருக்கமானவர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.
திமுகவுக்கு சிக்கல்
அரசியலில் அதிகாரத்தைப் பெற பல்வேறு முயற்சிகள் இயல்பானவை என்றும், ஒரு முயற்சி தோல்வியடைந்தால் அதனை பெரிதுபடுத்துவது சரியல்ல என்றும் அவர்கள் வாதிடுவதாக கூறப்படுகிறது.
எனினும், தவெக எம்.எல்.ஏ. பேரம் வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இது திமுகவுக்கு தான் சிக்கல் என்கின்றனர் திமுக சீனியர்கள்.












Click it and Unblock the Notifications