உயிரை பறித்த ஆன்லைன் லோன்..மார்ஃபிங் செய்து மிரட்டிய வடமாநில கும்பல்! இளைஞரின் விபரீத முடிவு! உஷார்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே காயல்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைன் மூலம் வாங்கிய 3000 கடனுக்கு கூடுதலாக பணம் கட்டச்சொல்லி வடமாநிலக் கும்பல் இளைஞரின் படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டிதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டினம்- கீழ லெட்சுமி புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சகாயராஜ் என்பவரது மகன் சாமுவேல்ராஜ் ( வயது 20-). இவர் சில நாட்களுக்கு முன் ஆன்லைனில் தனியார் லோன் ஆப் மூலம் ரூ 3000 கடன் பெற்றுள்ளார்.
தொடர்ந்து கடன் கொடுத்த நிறுவனத்திலிருந்து வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சாமுவேல்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு அதிக பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதற்கு சாமுவேல்ராஜ் மறுப்பு கூறியதுடன் கூடுதல் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த வடமாநில கும்பல் சாமுவேல்ராஜின் புகைப்படத்தை அசிங்கமான படத்துடன் மார்பிங் செய்து அதில் கடன் பிராடு என பதிவிட்டு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த மார்பிங் செய்யப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இந்தநிலையில் சாமுவேல்ராஜ் நேற்று இரவு வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.
தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று கொம்புத்துறை காட்டுப்பகுதியில் உடைமரத்தில் சாமுவேல்ராஜ் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆன்லைன் மூலம் பெற்ற கடனுக்கு கூடுதல் பணம் செலுத்த சொல்லி படத்தை மார்பிங் செய்து வாட்சப்பில் அனுப்பி மிரட்டிய வட மாநில கும்பலால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் லோன் ஆப் (Loan App) மூலம் மிரட்டல்களை எதிர்கொண்டால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது பயப்படாமல் சட்டப்பூர்வமாக புகார் அளிப்பதே ஆகும். போலி கடன் செயலிகள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களை அணுகி, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டுவது தற்போதைய முக்கிய சைபர் குற்றமாக உருவெடுத்துள்ளது. இந்த மிரட்டல்களில் இருந்து தப்பிக்க மற்றும் பாதுகாப்பாக இருக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
சைபர் குற்றங்களுக்கான மத்திய அரசின் அவசர உதவி எண்ணான 1930 ஐ உடனடியாகத் தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யுங்கள். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சைபர் குற்றப் புகார் இணையதளமான National Cyber Crime Reporting Portal என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாகப் புகார் அளிக்கலாம். மேலும், ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் RBI Sachet Portal இணையதளத்தில் முறைகேடான கடன் செயலிகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்க முடியும். மேலும், உங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட சைபர் க்ரைம் பிரிவிலோ எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.














Click it and Unblock the Notifications