கூட்டணிக்கு 'குட்பை' சொல்லும் திமுக? ஸ்டாலின் எடுத்த பெரிய முடிவு! இடைத்தேர்தலில் இனி தனித்து போட்டி
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் கூட்டணி வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், வரும் இடைத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் திமுக தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்தும், இந்த பேச்சுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இதற்கிடையில், வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தனித்துப் போட்டியிடும் வகையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக திமுக வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிகள் கிட்டத்தட்ட முற்றிலும் மாறியுள்ளது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

முன்பு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் விஜய் தலைமையிலான அரசுக்கு துணைநின்றன. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து விலகியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திமுக
அதேபோல், மதிமுகவும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளது. திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுகவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பின்னர் திமுகவிலேயே இணைந்த சம்பவமும் கவனிக்கத்தக்கது. இந்த மாற்றங்கள் அனைத்தும் திமுக கூட்டணி குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவாரூரில் முன்னாள் அமைச்சர் மதிவாணனின் மகன் கதிரவன் - மவுனிகா திருமண விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராஜா பேசிய கருத்து திமுகவில் புயலைக் கிளப்பியது.
ஆ ராஜா
அப்போது பேசிய அவர், "திமுக கூட்டணி இல்லை என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறுவதற்கு என்ன அதிகாரம் உள்ளது? உங்கள் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனால் திமுக கூட்டணி இல்லை என்று அறிவிப்பது உங்கள் உரிமை அல்ல. எங்கள் கூட்டணியில் அறுபதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் உள்ளன. ஆனால் தற்போது சூழ்நிலை மாறிவிட்டது. இனிமேல் கூட்டணி தேவையில்லை என்று தலைவர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். தமிழகத்தை பாதுகாக்க வேண்டுமானால் திமுக தனித்துப் போட்டியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றும் ஆ. ராஜா தெரிவித்தார்.
மு க ஸ்டாலின்
ஆ.ராஜாவின் இந்த பேச்சுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்தார். " கலைஞர் கருணாநிதி கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணியை இறுதி வரை பாதுகாப்பார். அவராக யாரையும் கூட்டணியில் இருந்து விலக்கியதில்லை. கூட்டணிக் கட்சிகள்தான் விலகிச் செல்வார்கள். அதே வழியைத்தான் நானும் பின்பற்றி வருகிறேன். எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதை காப்பாற்றுவதுதான் என் கடமை. ஆனால், இப்போது கூட்டணியே தேவையில்லை என்று கட்சியினரே கூறி வருகின்றனர். அந்த கருத்தையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசியல்
முக ஸ்டாலினின் இந்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கூட்டணி அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்து வந்த திமுக, தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய அணுகுமுறையை பரிசீலிக்கிறது என்ற பேச்சு திமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருப்பதும், கூட்டணிக் கட்சிகள் பலவும் அந்த அரசுக்கு ஆதரவாக மாறியிருப்பதும் திமுகவை புதிய வியூகத்தை வகுக்க வைத்துள்ளதாம்.
இடைத்தேர்தல்
இதற்கிடையில், விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்காமல், அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிக் கட்சிகளின் வலிமையை நம்புவதற்குப் பதிலாக, திமுகவின் தனிப்பட்ட வாக்கு வங்கியை சோதித்து பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கட்சிக்குள் ஒரு தரப்பு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
2031 சட்டப்பேரவைத் தேர்தல்
முக ஸ்டாலின் பேச்சுக்கு கட்சியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், திமுகவின் இடைத் தேர்தல் வியூகத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி வட்டாரங்களில் வலுத்து வருகிறது. குறிப்பாக வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் திமுக எடுக்கும் முடிவே, 2031 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications