Neet Reexam Results 2026: நீட் மறுத்தேர்வு முடிவுகள் எப்போது? NTA-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் (NEET UG 2026) மறுதேர்வு முடிவுகள் வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மறுதேர்வு காரணமாக மருத்துவப் படிப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுமோ என்று மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என என்.டி.ஏ அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

வழக்கமாகத் தேர்வு முடிந்த 45 நாட்களில் முடிவுகள் வெளியாகும். ஆனால், இந்த முறை 37 நாட்களிலேயே முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
பின்னணி என்ன?
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனால் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் (Answer Key) ஜூன் 25-ல் வெளியிடப்பட்டன. இதற்கு மாணவர்கள் ஜூன் 28 வரை ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட புகார்கள் மாணவர்களிடமிருந்து வந்துள்ளன.
"ஒவ்வொரு புகாரையும் நாங்கள் தனித்தனியாக ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களைச் சரிபார்த்த பிறகே இறுதி விடைக்குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் தயார் செய்யப்படும்," என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு எப்படி நடக்கும்?
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மருத்துவக் கலந்தாய்வு (Counselling) தொடங்கும். அகில இந்திய ஒதுக்கீடு (15%): எய்ம்ஸ் (AIIMS), ஜிப்மர் (JIPMER) உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) நடத்தும்.
மாநில ஒதுக்கீடு (85%): அந்தந்த மாநில அரசுகள் இதற்கான கலந்தாய்வை நடத்தும். மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து, தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனப் பல கட்டங்களாக இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
தயார் நிலையில் தமிழ்நாடு!
தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மாணவர் சேர்க்கைக்கான ஆரம்பகட்டப் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications