ஐடிஐ படித்தவர்களுக்கே சிறப்பான எதிர்காலம்.. பிரதமர் மோடி சொல்லும் புது கணக்கு!
டெல்லி: செயற்கை நுண்ணறிவு (AI), வேலை வாய்ப்பு சந்தையை மாற்றியமைத்து வரும் சூழலில்.. பல்கலைக்கழக பட்டங்களை விட, தொழில் பயிற்சி நிலையங்களில் பெறப்படும் நடைமுறை திறன்களுக்கு எதிர்காலத்தில் அதிக மதிப்பு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
உத்தரபிரதேசம் லக்னாவில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது தேசிய திறன் பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். கோட், பேண்ட், டை அணிந்து கையில் காகித சான்றிதழுடன் சுற்றி திரிபவர்களை விட, உண்மையான கைத்திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களுக்கே உலகம் அதிக மதிப்பு அளிக்கும் என்று மோடி கூறியிருக்கிறார்.

டிகிரி முடித்துவிட்டு, வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் அதிக அளவில் காத்திருந்த நிலை இப்போது மாறியிருப்பதாக பரவலாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. டிகிரியை விட திறமை இருப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில்.. பிரதமர் மோடியே இந்த விஷயம் குறித்து பேசி இருப்பது கவனம் பெற்று இருக்கிறது.
பட்டமளிப்பு விழாவில் பேசிய மோடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பலரின் வேலைகளை பறித்துவிடும் என்ற அச்சம் இருந்தாலும்.. தனித்துவமான கைத்திறன் மற்றும் செய்முறை அறிவு கொண்டவர்களின் வேலையை யாராலும் பறிக்க முடியாது என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார். அந்நிய படையெடுப்பு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் பாரம்பரிய கைவினைத் திறன் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மெக்கலே கொண்டு வந்த கல்வி முறை, திறன் சார்ந்த இந்திய கல்வி சமூகத்தை. வெறும் காகித வேலை செய்யும் எழுத்தாளர்களை உருவாக்கும் அமைப்பாக மாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இன்னும் பல பெற்றோர், தங்கள் பிள்ளைகள் கல்லூரிக்கு செல்லாமல்.. நீல சீருடை அணிந்து ஐடிஐயில் படிப்பதை உறவினர்களிடம் சொல்ல வெட்கப்படுவதாகவும், இந்த மனநிலையை மாற்றி, தொழில்நுட்ப தொழில் கல்விக்கு உரிய கௌரவத்தை தேடித் தர தான் உறுதியற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
துபாய், சவுதி அரேபியா, கத்தார், அபுதாபி, குவைத் போன்ற நாடுகளுக்கு செல்லும் போது.. எங்கள் நவீன நகரங்கள், எங்கள் பணத்தால் கட்டப்படவில்லை! இந்திய கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பால் கட்டப்பட்டவை! என அங்கிருக்கும் அரச குடும்பத்தினர் கூறுவதாக பிரதமர் நினைவு கூர்ந்தார். இன்று ஒட்டுமொத்த உலகமும், பல்கலைக்கழக பட்டதாரிகளை விட, இந்தியாவின் ஐடிஐ பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் எதிர்பார்ப்பாக கூறியிருக்கிறார்.
மேற்கு ஆசிய போர்சூழலால்.. எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்ட போது, வீடுகளுக்கு தினமும் ஒரு லட்சம் குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது. ஆனால், நாட்டில் பிளம்பர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவியதால்.. தினமும் 15,000 முதல் 20,000 இணைப்புகள் மட்டுமே வழங்க முடிந்ததை சுட்டிக்காட்டிய அவர், நாடு பிளம்மர்களுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது என திறன் சார்ந்த தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை விளக்கினார்.


Click it and Unblock the Notifications
