கைவிட்ட பருவமழை! வறட்சியின் பிடியில் டெல்டா மாவட்டம்! அரசு என்ன செய்யப்போகிறது?
திருவாரூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், டெல்டாவில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும். இதை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடக்கும். டெல்டாவில் இரண்டு பகுதிகளில் இருக்கின்றன. தஞ்சை முழுவதும், அங்கிருந்து மன்னார்குடி வரை பெரும் நிலவுடமையாளர்கள் இருக்கிறார்கள். இது மேல தஞ்சையாகும். இப்பகுதி விவசாயிகள் காவிரி நீர் இருந்தாலும், இல்லை என்றாலும் ஆழ்துளை கிணறை வைத்து தண்ணீர் எடுத்து சாகுபடி செய்துக்கொள்வார்கள்.

ஆனால், கீழதஞ்சை என்படும் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெரும்பாலும் காவிரி நீரை நம்பிதான் விவசாயம் நடக்கிறது. குறிப்பாக திருவாரூரில் ஏறத்தாழ 90%க்கும் அதிகமான விவசாயிகள் காவிரி நீரைதான் நம்பியிருக்கின்றனர். இப்படி இருக்கையில் கீழ தஞ்சையில் இந்த முறை குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. சரி குறுவைதான் இப்படி ஆயிடுச்சு, தாளடி-சம்பா சாகுபடியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விவசாயிகள் காத்திருந்தனர்.
அதற்கேற்றபடி மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டு தண்ணீர் கிடைத்தது. ஆனால், இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. தாளடி-சம்பா பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக தற்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். மழையும் கூட எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை.
வங்கக்கடலில் உருவான 3 புயல்களும் ஆந்திராவுக்கு போய்விட்டதால், மொத்தமா டெல்டா மாவட்டம் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. நிலைமையை சரி செய்ய அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் போதிலும், சாகுபடிக் காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியாது என்பதை உணர்ந்ததால், வழக்கமாக அளவை விட பாதிக்கும் குறைவாக சுமார் 7 லட்சம் ஏக்கரில் தான் சம்பா/தாளடி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், அந்த பயிர்களையும் காப்பாற்ற முடியவில்லை.
சம்பா/தாளடி பயிர்களின் சராசரி வாழ்நாள் 120 முதல் 125 நாள் ஆகும். ஆனால், பெரும்பாலான பயிர்கள் இப்போது 40 முதல் 50 நாள்களை மட்டுமே கடந்துள்ள நிலையில், இன்னும் 70 முதல் 80 நாள்களுக்கு இதே முறையில் தண்ணீர் வழங்குவது சாத்தியமல்ல. மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் நீரை வைத்து அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.
பயிர்களுக்காக உழவர்கள் ஏக்கருக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர். இத்தகைய சூழலில் சம்பா/தாளடி பயிர்களும் வறட்சியால் வாடி கருகிவிட்டால், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது. வட்டிக்கு கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்துள்ள காவிரி பாசன மாவட்ட உழவர்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.
எனவே இந்த மோசமான நிலையிலிருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அதற்குரிய இழப்பீடுகளை வழங்குவது தான். இந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், காவிரி பாசன மாவட்டங்களுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்து, அவற்றை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் வாடிய சம்பா/தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
பாமக மட்டுமல்ல, தவெக ஆட்சியமைய ஆதரவு கொடுத்த இடதுசாரிகளும் கூட இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். அரசு இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
