தவெக எம்.எல்.ஏக்களுக்கு கட்சியில் புதிய பதவிகள்.. புதிதாக 5 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் விஜய்!
சென்னை: தவெகவில், நிர்வாக வசதிக்காக காஞ்சி தெற்கு, திருவண்ணாமலை வடமேற்கு, நெல்லை தென்கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு என புதிய மாவட்டங்கள் உருவாக்கி முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 132 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.எஸ். முருகன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஜோசப் விஜய் ஆட்சி அமைத்தார். இந்நிலையில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம் ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று தவெகவில் இணையும் நிகழ்வு மகாபலிபுரத்தில் உள்ள அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், தவெகவில் நிர்வாக வசதிக்காக அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், புதிதாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய மாவட்டங்களுக்கு தவெக எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன், திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளராக மரிய ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications