இந்த ஆண்டு முதலே இடஒதுக்கீடு-மத்திய அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

Arjun Singh
டெல்லி: மத்திய அரசின் நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் 2008-09ம் ஆண்டிலிருந்தே ஒபிசி இட ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இதில் கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தோரை சேர்க்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பை வரவேற்ற அரசியல் கட்சிகள், கிரீமி லேயர் நீக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப் பாரபட்சத்தை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அக்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் பிரதமர் மன்மோகன் சிங், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கடிதம் அனுப்பபப்பட்டது. அக்கட்சிகளின் தலைவர்கள் நேரிலும் சந்தித்தனர்.

ஆனால் உச்சநீதிமன்றத்துடன் மோதும் எண்ணம் இல்லை என்பதை கூறி வந்த மத்திய அரசு, கிரீமி லேயர் விவகாரம் தொடர்பாக பிறகு விவாதித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் இட ஒதுக்கீடு எப்போது முதல் அமலாகும் என்ற குழப்பமும் நிலவி வந்தது. இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு கட்டியுள்ளது. இந்த ஆண்டு முதலே இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மத்திய அரசு நிதியுதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இட ஒதுக்கீட்டின் வரம்புக்குள் வராத கல்வி நிறுவனங்களைத் தவிர பிற மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில், நடப்பு கல்வியாண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஐஐஎம் மற்றும் ஐஐடி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையை ஏற்று செயல்படுவது எனவும் இந்த நிறுவனங்கள் முடிவு செய்து காத்திருக்கின்றன.

மொத்தமாக 27 சதவீதத்தை இந்த ஆண்டே அமல்படுத்துவதற்குப் பதில், ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அளவில் 3 ஆண்டுகளுக்கு படிப்படியாக இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, 3வது ஆண்டுக்குப் பின்னர் முழுமையாக அமல்படுத்துவது என இந்த நிறுவனங்கள் யோசனை தெரிவித்திருந்தன

ஆனால் மத்திய அரசு 27 சதவீத இட ஒதுக்கீடும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, இதுதொடர்பாக நிலவி வந்த அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+