வேலூரில் தீ விபத்து-எஸ்எஸ்எல்சி விடைத்தாள்கள் நாசம்

பத்தாம் வகுப்பு இடைநிலை மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு விடைத்தாள்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருத்தப்பட்டு வருகிறது. வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
மொத்தம் 1.06 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இப்பணியில் 450 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். தினசரி மாலை விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தவுடன் அங்குள்ள பெரிய அறையில் விடைத்தாள்களை வைத்துப் பூட்டி சீல் வைப்பது வழக்கம்.
இந்த அறையில் மின்சார இணைப்புகள் எதுவும் இல்லை. அறையின் ஜன்னல்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு விடும். எனவே உள்ளே காற்று கூட புக முடியாது.
நேற்றும் இரவு 7 மணியளவில் விடைத்தாள்கள் அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் போய் விட்டனர். இதையடுத்து ஒரு போலீஸ்காரர் உள்ளிட்ட இருவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இரவு 10 மணியளவில் பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து குபுகுபுவென புகை வந்தது.இதைப் பார்த்து திடுக்கிட்ட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தந்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அறையில் இருந்த 30 ஆயிரம் விடைத்தாள்கள் நாசமாகி விட்டன. இதில் 5000 விடைத்தாள்கள் முற்றிலும் எரிந்து கருகிப் போய் விட்டன. 25 ஆயிரம் விடைத்தாள்கள் பாதி எரிந்தும், மீதி கருகியும் சேதமடைந்து விட்டன.
தீவிபத்தில் எரிந்தவற்றில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23,649 ஆங்கிலம் 2ம் தாளுக்கான விடைத்தாள்களே அதிகமாகும்.
இதில் சதித் திட்டம் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வேலூர் சரக டிஐஜி சுந்தரமூர்த்தி, எஸ்.பி. அறிவுச்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications