தேவர் சிலை முன்பு மறியல்-கார்த்திக் கைது
மதுரை:மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அவமரியாதை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று தென் மாவட்டங்களில் பந்த் நடத்த பார்வர்ட் பிளாக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து நேற்று தென் மாவட்டங்களில் பந்த் நடந்தது. இருப்பினும் இந்த பந்த்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் சாலை மறியல், பஸ்கள் மீது கல்வீச்சு உள்ளிட்டவை நடந்தன.
தென்காசி, நெல்லைக்கு நடிகர் கார்த்திக் சென்று பேசினார். பின்னர் அவர் மதுரைக்கு வந்தார். கோரிப்பாளையம் வந்த கார்த்திக் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு பார்வர்ட் பிளாக் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
சிலைக்கு மாலை போட்ட கார்த்திக், தொண்டர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு காரில் ஏறிக் கிளம்பப் போனார். அப்போது தொண்டர்கள், தலைவா நீங்களும் மறியல் பண்ணுங்க என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து காரிலிருந்து இறங்கிய கார்த்திக், மறியல் செய்யப் போனார். ஆனால் அவரைத் தடுத்த போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். அவருடன் 200க்கும் மேற்பட்ட தொண்டர்களையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை நகரில் நேற்று 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டுள்ளன. பல டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து பெரியார் பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பரபரப்பும், பதட்டமும் நிலவி வருவதால் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications