Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் ஏற்றுவதுதான் இருட்டை விலக்கும் ஒளி விளக்கு-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
மதுரை: தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒளியால் வீட்டை நிரப்பி கொண்டிருக்கிறது. சில பேர் விளக்கு ஏற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்றுகின்ற விளக்கு, ஏதோ ஒரு காரியத்திற்காக ஏதோ மலையாளம் மாந்த்ரீகர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றப்படும் விளக்கு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மதுரையில் இரு ஐடி பூங்காக்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார்.

நேற்று மாலை விமான நிலைய வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். இலந்தைக்குளத்தில் 29 ஏக்கர் பரப்பளவிலான ஐடி பூங்காவுக்கும், வடபழஞ்சியில் 230 ஏக்கர் பரப்பளவிலான ஐடி பூங்காவுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், மதுரை விமான நிலையத்தில் 610 ஏக்கர் பரப்பளவில் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 12,500 அடி நீளமுள்ள ஓடுதளமும் அமைக்கப்படவுள்ளது. இதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மதுரை விமான நிலையத்தில் 17 ஆயிரத்து 560 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய சர்வதேச தரத்திலான முனையமும் அமைக்கப்படுகிறது. இப்பணியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மதுரைக்கு நேற்று காலை விமானம் மூலம் வந்த முதல்வர் கருணாநிதியை மதுரை கலெக்டர் ஜவஹர், மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதல்வர் ஓய்வெடுத்தார். பின்னர் மாலையில் இந்த மூன்று விழாக்களிலும் அவர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், 2004ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள உறுதிமொழிகளை இப்போது நிறைவேற்றி வருகிறோம். சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுபடுத்தி பெரிய அளவிலே விரிவாக்கம் செய்வோம். அதேபோல மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களை நிலை உயர்த்துவதோடு, சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களை சீரமைத்து, நவீன வசதிகளுடன் கூடிய விமான நிலையங்களாக உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம்.

பொதுவாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. அதற்குப் பெயர்தான் தேர்தல் வாக்குறுதி. ஆனால் நாம் அவற்றை நிறைவேற்றுகிறோம். அதற்கு அடையாளமாக சுட்டிக் காட்டுகின்ற ஒன்றுதான் இன்று மதுரையில் நடந்து வரும் விழா.

மதுரை விமான நிலைய வளர்ச்சிப் பணிக்கு மாநில அரசுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு ரூ. 110 கோடி செலவு ஏற்படுவதால் அதில் பாதித் தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்ைக வைத்துள்ளோம். அந்தக் கோரிக்கையை நிபந்தனையாக வைத்து , அதை ஏற்றால்தான் நிலம் தருவோம் என்று சொல்லவில்லை. இப்போதே தருவற்கு கையெழுத்து போட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறேன். ஒரு நம்பிக்கைதான்.

நான் தங்கி இருந்த இடத்திலே விமான நிலைய குழுமங்களின் ஆணையத் தலைவர் ராமலிங்கம் என்னிடம் ஒரு ஒளிப்பேழையை காண்பித்தார். அதை நான் பார்த்தேன். பார்த்து நான் அதிசயித்துப் போனேன். இது மதுரையில் உருவாகப் போகின்ற விமான நிலையமா, சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற விமான நிலையமா என்ற அளவுக்கு அந்த வரைபடம் இருந்தது.

மதுரை விமான நிலையம் மட்டுமல்ல, திருச்சியானாலும், கோவையானாலும், சேலமானாலும், ெசன்னையிலே நிறுவப்படவுள்ள விமான நிலையமானாலும் சரி, அங்கு மேற்கொள்ளப்படவுள்ள கட்டுமானப் பணிகள் உலகத் தரத்தோடு இருக்கும் என்று சொல்லுகின்ற அளவுக்கு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.

தமிழகத்தில் வளர்ச்சியின் நிழல்

இந்தியாவில் இன்றைக்கு எவ்வளவோ வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை அந்த வளர்ச்சியின் நிழல் நன்றாக தெரிகிறது. இதுவரை இருந்த மத்திய அரசுகள் வழங்கிய நிதியை விட அதிக நிதி வழங்கிய மத்திய அரசு இன்றைக்கு இருக்கின்ற மத்திய அரசுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மத்திய அரசு பாராட்டுகின்ற அளவுக்கு மாநில அரசு சாதனைகளை செய்கிறது என்றால் அப்படிப்பட்ட சாதனைத் திட்டம் வழங்குகின்ற அரசாகவும், இங்கே உள்ள தமிழ் மாநில அரசு தான் இருக்கிறது என்பதை உலகம் மிக நன்றாக அறியும்.

செலவுக்குப் பணம் கொடுத்தால், அதை ஒழுங்காக செலவு செய்கின்ற பிள்ளைக்குத்தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் மீண்டும் மீண்டும் செலவுக்கு பணம் கொடுப்பார்கள். இதை நாம் படித்து இருக்கிறோம். 2 பிள்ளைகளில் எந்தப் பிள்ளை கெட்டிக்காரப் பிள்ளை, ஆற்றல் உள்ள பிள்ளை என்பதை தெரிந்து கொள்ள ஒரே தொகையை 2 பிள்ளைகளிடமும் கொடுத்து வீட்டை நிரப்பு என்று தந்தை பணத்தைக் கொடுத்தனுப்பினார்.

ஒரு பிள்ளை கடைக்குப் போனான். கண்டபடி சாமான்களை வாங்கினான். இடத்தை நிரப்ப முடியாத அளவுக்கு வந்தபோது காய்ந்த பொருட்களையும், வைக்கோலையும் வாங்கினான். அதை எல்லாம் வீட்டுக்குள் வைத்து நிரப்பினான். தந்தையைக் கூப்பிட்டு பார், பார் வீட்டை நிரப்பி விட்டேன் என்றான்.

மற்றொரு பிள்ளை என்ன செய்தான் என்று அவனிடம் கேட்டார். நான் ஒன்றும் செய்யவில்லை. ஒரு விளக்கு வாங்கி வீட்டில் ஏற்றி இருக்கிறேன் என்றார். விளக்கு ஒளியால் வீடு நிரம்பி இருந்தது. ஒளியால் வீட்டை நிரப்பிய அந்தப் பிள்ளையைப் போல இங்கே தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒளியால் வீட்டை நிரப்பி கொண்டிருக்கிறது.

மாந்த்ரீகர்கள் சொன்னதால் விளக்கேற்றுவோர்!

சில பேர் விளக்கு ஏற்றுகிறார்கள். விளக்கால் ஒளி ஏற்றுகிறோம் என்று ஏளனம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்றுகின்ற விளக்கு, ஏதோ ஒரு காரியத்திற்காக ஏதோ மலையாளம் மாந்த்ரீகர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றப்படுகின்ற விளக்கே தவிர அவர்கள் ஏற்றுகின்ற விளக்கு, விளக்கு அல்ல.

இருட்டை விலக்க நாம் தான் விளக்கை ஜோதிமயமாக ஏற்றி வைத்திருக்கிறோம். நம்மை பொருத்தமட்டும் உலகத்துக்கே விளக்காக இருப்பது சூரியன். அந்த சூரியனுக்கு கையாக இருப்பது காங்கிரஸ். அதற்குப் பாதுகாப்பாக இருப்பது அரிவாள், சம்மட்டி. அதற்கு ஆபத்து ஏற்படும் போது அதை நசுக்க சுத்தியலும் நம்மிடம் உள்ளது. தேவைப்பட்டால்தான் அந்த சுத்தியலை பயன்படுத்துவோம் என்கிறார் இந்த விழாவில் கலந்து கொண்ட மோகன் எம்.பி. கூட்டு முயற்சியால் தான் நினைப்பதை நிறைவேற்ற முடிகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா, காமராஜர், சிதம்பரனார் போன்றோரால் சிந்திக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம். இந்தத் திட்டம் கடந்தாண்டே முடிந்திருக்கும். அதைத் தடுத்தவர்கள் யார் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கப் பணியையும் தடுக்க சிலர் வருவார்கள்.

வலுவான, வளமான இந்தியா உருவாக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+