ரவுடி லிங்கம் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்க ஆணை
சென்னை: சிறைக்குள் கொல்லப்பட்ட ரவுடி லிங்கம் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியில் அலட்சியமாக இருந்த போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
கடந்த 1996ல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி லிங்கம் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான். அப்போது 20 பேர் கொண்ட ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சிறை மதில்சுவரை தாண்டி உள்ளே வந்தது.
அங்கிருந்த 3 சிறைக் காவலர்களை மிரட்டி லிங்கம் அடைக்கப்பட்டிருந்த அறைச் சாவியை அந்த கும்பல் பறித்து சென்றது.
பின்னர் லிங்கத்தின் செல்லுக்குள் சென்று அவனை கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றது. தடுக்க முயன்ற மற்ற கைதிகளுக்கும் வெட்டு விழுந்தது.
பிணமாகிக் கிடந்த லிங்கத்தின் கழுத்தை அறுத்து தலையை எடுத்துச் சென்று சிறைக்கு இரண்டு கி.மீ. தள்ளியிருந்த பேருந்து நிலையத்தில் அந்த கும்பல் வைத்து விட்டு தப்பியது.
இதையடுத்து லிங்கம் கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி அவனது மனைவி ரோகிணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிறைக்காவலில் லிங்கம் இறந்ததால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி இன்று பரபரப்பான தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு விவரம்:
சிறைக்குள் புகுந்து லிங்கம் தாக்கப்படக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து கூடுதல் பாதுகாப்பை அளிப்பதற்கு போலீசாரும், சிறை அதிகாரிகளும் தவறிவிட்டனர்.
சிறைக்குள் அடைபட்டுள்ளவரை வெளியாட்கள் புகுந்து தாக்கிக் கொன்றிருக்கலாம். ஆனால், இந்த சம்பவத்துக்கான பொறுப்பை அரசுதான் சுமக்க வேண்டும்.
விசாரணைக் கைதிகளை சிறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. லிங்கம் கொலையானதற்கு இழப்பீடாக அவர்களது குடும்பத்தாருக்கு ரூ.6 லட்சத்தை அரசு வழங்க வேண்டும்.
அவரது மனைவி மற்றும் 2 மைனர் குழந்தைகள் பெயரில் தலா ரூ.2 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது அரசு வழக்கறிஞர், கஸ்டடியில் உள்ள கைதி அவரது எதிரிகளால் கொல்லப்பட்டதற்காக அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமில்லை.
லிங்கம் ஒரு பிரபல ரவுடி. கடுமையான பல குற்றங்களைச் செய்தவர். முன்விரோதம் காரணமாக அவரது எதிரிகளால் சிறைக்குள் கொல்லப்பட்டார்.
சிறைக் காவலர்கள் அதிக கண்காணிப்புடன் இருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துவிட்டது என்று வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜோதிமணி, சம்பவம் நடந்தபோது சிறைக்குள் போதுமான காவலர்கள் பணியில் இல்லை. பாதுகாப்புக்குப் பொறுப்பான உதவி சிறை அதிகாரியே அப்போது அங்கு இல்லை. இது சிறை சட்டவிதிகளை அடியோடு மீறிய செயலாகும்.
லிங்கம் உயிருக்கு ஆபத்து இருந்ததை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அவருக்கு கூடுதல் பாதுகாப்பை அளித்திருக்கலாம் அல்லது மத்திய சிறைக்கு மாற்றியிருக்கலாம்.
எனவே இந்த கொலைக்கும், காவலில் மரணம் ஏற்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications