சாப்ட்வேர் பயிற்சியுடன் வேலை-1,500 பேரிடம் ரூ.50 கோடி மோசடி
சென்னை: சென்னையில் சாப்ட்வேர் பயிற்சியும் வேலையும் அளிப்பதாகக் கூறி சுமார் 1,500 பேரிடம் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துவிட்டு ஏமாற்றியுள்ளது ஒரு நிறுவனம்.
சென்னை அண்ணாநகர் மேற்கு, 18வது மெயின் ரோட்டில் விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இதில் வேலைக்குச் சேர ரூ.50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயிற்சி அளிப்பதற்காக என்று சொல்லி இந்தப் பணத்தை வசூலித்துள்ளனர்.
முதலில் 6 மாத பயிற்சி, பின்னர் வேலை என்று உறுதியளிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் ரூ.11,000 வரை உதவித் தொகை தரப்படும் என்றும் கூறப்பட்டது.
பிஇ, எம்.சி.ஏ. உள்ளிட்ட பொறியியல் படிப்பு முடித்த ஏராளமானோர் பணம் கட்டினர். சுமார் 1,500 பேர் வரை இவ்வாறு பணத்தைக் கட்டியதாகத் தெரிகிறது.
இதில் சிலரை மட்டும் பயிற்சிக்காக சேர்த்துக் கொண்டு பிறரை பின்னர் வருமாறு கூறியுள்ளனர். ஆனால், பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுதியளித்தபடி உதவித் தொகையும் தரப்படவில்லை.
பணம் கட்டியவர்கள் தங்களையும் பயிற்சியில் சேர்க்கக் கோரியும் வேலை தரக் கோரியும் தினமும் வந்து சென்றுள்ளனர். அவர்களை பின்னர் அழைப்பதாகச் சொல்லி இந்த நிறுவனம் காலம் கடத்தி வந்தது.
இதில் பணம் கட்டியவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதமும் மோதலும் நடந்து வந்தது.
இந் நிலையில் அண்ணா நகரில் இயங்கி வந்த இந்த நிறுவனம் நேற்று திடீரென மூடப்பட்டது. திருமங்கலத்தில் உள்ள அதன் கிளையும் மூடப்பட்டது.
பணம் கட்டி ஏமாற்றமடைந்தவர்கள் இதையறிந்து நேற்று மாலை திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்களை ஏமாற்றிய நிறுவன நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், பணத்தை திரும்பப் பெற உதவ வேண்டும் என கோரினர்.
இது குறித்து விசாரிக்குமாறு போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இதையடுத்து இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ஜெய கெளரி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனம் ரூ. 50 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications