திருச்சி இடுகாட்டு 'தீண்டாமை சுவரை' இடிக்க வி.சி. கோரிக்கை
நெல்லை: திருச்சி இடுகாட்டில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரையும் தமிழக அரசு இடிக்க வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உத்தபுரத்தில் தீண்டாமை சுவரில் 10ல் ஒரு பாகத்தை தமிழக அரசு இடித்துள்ளது. இதற்கு அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, முழு சுவரையும் இடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதேபோன்று திருச்சி மாநகராட்சியில் கிறிஸ்தவர்களுக்கான இடுகாட்டில் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையில் தீண்டாமை சுவர் உள்ளது. இந்த சுவரையும் அரசு இடித்துத் தள்ள வேண்டும்.
குறவர் இன மக்களை சில இடங்களில் தாழ்த்தப்பட்டவராகவும், சில இடங்களில் பழங்குடியினராகவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் குறவர் இனத்தை பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டும்.
அவர்களுக்கு எளிய முறையில் சாதி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் குறும்பர் சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும். கிறிஸ்தவ தலித்துகளை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
சேர்த்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வரும் ஜூன் 29ம் தேதி விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தப்படும். கத்தோலிக்க மதத்தில் நிலவுகிற ஜாதிக் கொடுமைகளை களைய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த மாநாட்டில் அந்த கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படும்.
சேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவனம், தாழ்த்தப்பட்ட மக்களின் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அந்த நிலம் மீட்கப்பட்டு மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications