பூங்கோதைக்கு ஆதரவு தெரிவித்து ஆலடியில் கடையடைப்பு

சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பூங்கோதை ஆலடி அருணா. லஞ்ச வழக்கில் சிக்கிய தனது உறவினரைக் காப்பாற்றுவது தொடர்பாக இவர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாயாவிடம் தொலைபேசியில் பேசியது ஒட்டுக் கேட்கப்பட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வரிடம் கடிதம் வழங்கினார் பூங்கோதை. அவரது கடிதத்ைதப் பரிசீலித்த முதல்வர் கருணாநிதி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பூங்கோதையின் ராஜினாமா ஏற்கப்பட்டது. அவருக்குப் பதில் தற்போது கீதா ஜீவன் சமூக நலத்துறை அமைச்சராகியுள்ளார்.
இந்த நிலையில் பூங்கோதையின் பதவி பறிக்கப்பட்டு விட்டதாக கூறி அவரது சொந்த ஊரான ஆலடிப்பட்டியிலும், அருகில் உள்ள ஆலங்குளத்திலும் (இங்குதான் பூங்கோதையின் தந்தை ஆலடி அருணா படு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது) இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது.
பூங்கோதை சார்ந்த சமூகத்தினர் பெருமளவில் இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டனர். பூங்கோதைக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டம் நிலவியது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications