கடைகளில் கூவிக் கூவி விற்கப்படும் ரேசன் அரிசி-ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: ரேசன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தனியார் கடைகளில் கூவிக் கூவி விற்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதும், தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஏழை, எளிய மக்களுக்காக நியாய விலைக் கடைகளின் மூலம் அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மானியத்திற்காக ரூ.1,950 கோடி தமிழக அரசின் 2008-2009ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் இதன் பயன் ஏழை, எளிய மக்களைச் சென்றடைவதில்லை. பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுவதாக தமிழக மக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதர அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில், ஒரு சில கடைகளில், ஒரு சில மாதங்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

கடந்த 2007ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட தரமான ரேஷன் அரிசியின் அளவு 1.09 லட்சம் குவிண்டால் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ. 11 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வழியாக ரூ. 1.16 கோடி மதிப்புள்ள 11,826 குவிண்டால் ரேஷன் அரிசியும், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக ரூ. 98 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும், வேலூர் மாவட்டம் வழியாக ரூ. 79 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும்,

வட சென்னை மாவட்டம் வழியாக ரூ. 62 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும், சேலம் மாவட்டம் வழியாக ரூ. 45 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும், ஈரோடு மாவட்டம் வழியாக ரூ. 53 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும், மதுரை மாவட்டம் வழியாக ரூ. 55 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும்,

நீலகிரி மாவட்டம் வழியாக ரூ. 17 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியும் கடத்தப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, அங்குள்ள தனியார் கடைகளில் கூவிக் கூவி விற்கப்பட்டதாகவும், இது குறித்து அம்மாவட்ட மக்கள் ராமநாதபுரம் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் ஒரு கடையில் சோதனையிட்ட போது, 105 மூட்டை ரேஷன் அரிசி அங்கிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஏழை, எளிய மக்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் அரிசியைக் கடத்தி, கள்ளச் சந்தையில் விற்கும் கயமைச் செயலை ஒழிப்பதற்காக கடும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று கூறிவிட்டு, அதற்கு முற்றிலும் எதிரான வகையில் செயல்பட்டுக் கொண்டு, அரிசிக் கடத்தலை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசிற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது, நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கான அரிசியைக் கடத்தி, கள்ளச் சந்தையில் விற்கும் கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் மாதா மாதம் 20 கிலோ தரமான அரிசி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தமிழக மக்களின் சார்பாக தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+