ம.ஜனதா தள துரோகத்திற்கு மக்கள் பதிலடி-ஜேட்லி
டெல்லி: மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் துரோகத்திற்கு கர்நாடக மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியும் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டன என்று கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளரான அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
கர்நாடக பாஜக தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ஜேட்லி பேசுகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் செய்த துரோகச் செயலுக்குப் பின்னர் கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதில் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, பாஜக தலைவர் சதானந்த கெளடா, பொதுச் செயலாளர் அனந்தகுமார் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எனது பங்கு இதில் சிறிதுதான். இந்த வெற்றி அனைவரின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் துரோகத்திற்கு கர்நாடக மக்கள் சரியான பதில் கொடுத்துள்ளனர். மாநிலத்திலேயே சிறந்த கட்சியாக பாஜக வென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சிப் பாதையில் உள்ளது. அவர்களின் பிரசாரம் மக்களைக் கவரவில்லை. சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். நல்ல நிர்வாகத்தைத் தர பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர் என்றார்.
உடன் இருந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் கொண்டாட்டம்:
கர்நாடகத்தில் பாஜக பெற்ற வெற்றியை புதுச்சேரி பாஜகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு கூடி பட்டாசுகள் வெடித்து பாஜகவினர் கர்நாடக வெற்றியைக் கொண்டாடினர். இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தப்போவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications