கொழும்பில் ஓடும் ரயிலில் குண்டுவெடிப்பு - 9 பேர் பலி
கொழும்பு: கொழும்பு நகரில் ஓடும் ரயிலில் குண்டுவெடித்ததில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கொழும்பு நகரின் மையப் பகுதியில் உள்ள மாரடானா என்ற இடத்திலிருந்து பானதுரா என்ற இடத்திற்கு நேற்று மாலை ஒரு ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
மாலை 5 மணியளவில் ரயில் டேஹிவெலா என்ற ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்ற சில விநாடிகளில் அதன் ஒரு பெட்டியில் பயங்கர சப்தத்துடன் குண்டுவெடித்தது.
இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் பீதியுடன் ரயிலை விட்டு குதித்து ஓடினர். குண்டுவெடித்த பெட்டி தூள் தூளாக சிதறிப் போய் விட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண் ஆவார். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேஹிவெலா ரயில் நிலையத்தில் நடந்துள்ள 2வது குண்டுவெடிப்புச் சம்பவம் இது. 12 ஆண்டுகளுக்கு முன்பு 1996ம் ஆண்டு ஜூலை மாதம் இதேபோல ரயிலில் குண்டு வெடித்தது. அதில், 91 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் நான்கு பெட்டிகளில் குண்டுகள் வெடித்ததால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
சமீப காலமாக கொழும்பு மற்றும் சுற்றுப் பகுதிகளில் பஸ் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ரயிலில் குண்டுவெடித்துள்ளது இலங்கை அரசை அதிர வைத்துள்ளது.
ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பு நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் கிடக்கும் பொருட்கள், பார்சல்களைத் தொட வேண்டாம் என பொதுமக்களை போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications