கோவையில் வாசன்-பிரபு கோஷ்டி அடிதடி, போலீஸ் தடியடி
கோவை: கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் வாசன்-பிரபு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர அடிதடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். இதில் பல காஙகிரசார் காயமடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் நீலகிரி தொகுதி எம்பி பிரபு தலைமையில் ஒரு கோஷ்டியும், மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இது போக அமைச்சர் இளங்கோவனுக்கும் தனி கோஷ்டி உண்டு.
இந் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வாசன் ஆதரவு கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர். பிரபுவின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் தனக்கு உள்ள செல்வாக்கை வைத்து இந்த மாற்றங்களை செய்தார் பிரபு.
இதனால் வாசன்-பிரபு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் தீவிரமானது. இதை எதிர்த்து வாசன் ஆதரவாளர்கள் கோவை தங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் கோவை கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் ராமநாதபுரம் சின்னப்பத் தேவர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.சின்னையன், புறநகர் மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் மற்றும் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் வாசன் ஆதரவாளர்களான குல்பி தங்கராஜ் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பொன் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் சுமார் 100 பேர் மண்டபத்தின் முன் நின்று கொண்டு பிரபு கோஷ்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பதிலுக்கு மண்டபத்தின் உள்ளே இருந்த பிரபு கோஷ்டி எதிர் கோஷம் எழுப்பியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந் நிலையில் இரவு 8 மணிக்கு கோவை தங்கம் எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார் காரில் வந்து இறங்கி வேகமாக மண்டபத்துக்குள் உள்ளே செல்ல முயற்சித்தார்.
மண்டப நுழைவு வாயிலில் நின்றிருந்த பிரபு எம்.பி ஆதரவாளர்கள் மயூரா ஜெயக்குமாரை தடுக்கவே அவரது தரப்புக்கும் பிரபு ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
நாலா பக்கமும் கற்கள் பறந்தன. நாற்காலிகள் தூக்கி வீச்பட்டன. டியூப்லைட்டுகள் அடித்து உடைக்கப்பட்டன, சாமியானா பந்தல் இழுத்து கீழே போடப்பட்டது. வேட்டி, சட்டைகள் உருவப்பட்டு, வெறும் 'பட்டா பட்டி அண்டிராயருடன்' இரு தரப்பும் மோதிக் கொண்டு உருண்டன.
இதில் கார்கள், பைக்குகளும் தப்பவில்லை. அவையும் தாக்கப்பட்டன. ருமண மண்டபத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப்படத்தை சிலர் உடைத்து நொறுக்கினர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸார் கலைந்து சிதறி ஓடினர். இந்த தடியடியில் போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே கலவரம் நடந்துகொண்டிருந்தபோதே மேயர் வெங்கடாசலம் பேசி முடித்துவிட்டு வெளியே வர முயன்றார். ஆனால், கதவைப் பூட்டிய போலீசார் யாரையும் வெளியே வரவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கவில்லை.
நீண்ட நேரத்துக்குப் பின் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த பிரபு ஆதரவாளர்கள் ஒலம்பஸ் பகுதியில் மேயர் வெங்கடாசலம் தலைமையில் திடீரென ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications