Perambur: ரேஷன் அட்டை வழங்கிய கையோடு.. அரிசி பருப்பை தன் கையால் வழங்கிய விஜய்.. பெரம்பூரில் சுவாரசியம்
சென்னை: முதல்வர் விஜய் இன்று பெரம்பூர் தொகுதிக்கு சென்றநிலையில், அங்குள்ள ஷர்மா நகர் ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை நேரடியாக அவரே வழங்கினார். அப்போது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களில் முதல் கட்டமாக 50 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார். இம்மாத இறுதிக்குள் 73 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாக பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்தார். முதல்வராக பதவியேற்ற பிறகு இன்று பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்த விஜய்க்கு வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் நின்று மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் விஜய்யும் வழக்கம்போல் காரில் வராமல், வாகனத்தில் வருகை தந்தார். மக்களுக்கு கை அசைத்தபடி வருகை தந்தார்.

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகம்
பெரம்பூர் வியாசர்பாடியில் அமைக்கப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் விஜய் திறந்து வைத்தார். முன்னதாக, தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சட்டமன்ற அலுவலகத்தை சீரமைக்க அவர் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. முதல்வர் விஜய்யின் அறையும் பல்வேறு வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டது.
இதே போன்று கோரிக்கை கொடுக்க வரும் மக்கள் அமர வசதிக்காக இருக்கைகள் போடப்பட்டு, மனுக்கள் பெறுவதற்கு 2 கவுண்டர்கள் அமைக்கப்பட்டது. இதனையும் இன்று விஜய் ஆய்வு செய்தார். பின்னர் அதே வளாகத்தில் அமைக்கப்பட்ட அரசு இ சேவை மையத்தினையும் முதல்வர் விஜய் திறந்து வைத்தார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுகும் விதமாக அங்கு ஊழியர்களும் அமைக்கப்பட்டனர். அதனையும் விஜய் ஆய்வு செய்தார். அப்போது விஜய்யுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அரிசி, பருப்பு, பாமாயில் வழங்கிய விஜய்
பின்னர் விஜய் அருகில் உள்ள ஷர்மா நகர் ரேஷன் கடைக்கு நடந்தே சென்றார். அப்போது சாலையில் இரு புறமும் திரண்டிருந்த மக்களிடம் கை அசைத்தபடியே சென்றார். மக்களும் விஜய்க்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பிறகு ரேஷன் கடைக்கு சென்ற விஜய், முதல்கட்டமாக 50 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார். இதன் பிறகு முதல்வர் விஜய் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயனாளிகளுக்கு முதல்வர் விஜய் தன் கையாலே பொருட்களை வழங்கினார். அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவற்றை வழங்கினார். இது குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
73 ஆயிரம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்
முதற்கட்டமாக 50 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் 73 புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னர் விஜய் பேட்டரி வாகனம் மூலமாக பெரம்பூர் தொகுதி மக்களை சந்தித்தார். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.














Click it and Unblock the Notifications