கட்சியில இருந்து சேரலாம்..ஒரு கட்சியே வந்து சேரலாமா? அதிமுகவால் நிரம்பிய தவெக.. அல்லல்படும் நண்பாஸ்!
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையும் முன்னாள் நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுகவின் எதிர்ப்பு அணியாகவே தமிழக வெற்றிக் கழகம் மாறிவரும் நிலையில் ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே பதவியை எதிர்பார்த்து இருந்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என நினைத்த தங்கள் கனவில் மண் விழுந்து விடுமோ என்ற அச்சத்திலும் அவர்கள் இருப்பதாக சொல்கின்றனர்.
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆனாலும், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம், 108 தொகுதிகளில் அமோக வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியையும் பிடித்துள்ளது.

முதல்வராக விஜய் பதவி ஏற்ற பிறகு அரசியல் களத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுகவிலிருந்து ஏராளமான முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் என பலரும் தமிழக வெற்றி கழகத்தை நோக்கி பயணித்து வருகின்றனர்.
தவெக
தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் பேசிய விஜய், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் முக்கிய தலைவர்களை தனது பக்கம் இழுத்து வருவது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அதிமுகவை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததும் பரபரப்பை கிளப்பியது.
அதிமுக
தவெகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள் கட்சிப் பணியாற்றவோ அல்லது சேவை மனப்பான்மையோடு வரவில்லை. கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்புகளை எதிர்பார்த்தே வருகின்றனர். மேலும் இன்னும் சில வாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில் கவுன்சிலர், மேயர் பதவிகளை இலக்காக கொண்டு பல லோக்கல் நிர்வாகிகள் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை பொருத்தவரை கட்சியைத் தாண்டி தனிப்பட்ட செல்வாக்கும் பொருளாதார வலிமையும் தேவைப்படும்.
விஜய் ரசிகர் மன்றம்
இதனால் அதிமுகவிலிருந்து வரும் பலர் அந்த பதவிகளை குறி வைத்தே தற்போது கட்சிக்குள் நுழைந்து வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்க காலத்திலிருந்து கட்சிக்காக உழைத்து நிர்வாகிகள் தங்களின் பல ஆண்டுகால உழைப்பு வீணாய் போய்விடுமோ என்ற கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த வாய்ப்புகள் தங்களது கிடைக்காமல் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சென்று விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. மேலும் தற்போது கட்சியை மறு சீரமைக்கும் பணிகளில் விஜய் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில் ஒன்றியம், நகரம், மாநகர அளவிலான பொறுப்புகளும், அதிமுகவினருக்கு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த்
மேலும் எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில் ஏற்கனவே அங்கு இருக்கும் மாவட்ட செயலாளர்களும் எப்போது தங்கள் பதவிகள் பறிபோகுமோ என்ற அச்சத்திலேயே இருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய புஸ்ஸி ஆனந்த் புதிதாக வருபவர்களை எந்த நிலையில் புறக்கணிக்க மாட்டோம் என கூறியிருந்தார்.
நிர்வாகிகளின் அதிருப்தி
இந்த கருத்து தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே புஸ்ஸி ஆனந்தை சிலர் நேரில் சந்தித்து தங்களை புறக்கணிக்க கூடாது, புதிய நபர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், ஆனால் எங்களை மறந்து விடாதீர்கள் என சொன்னதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதில் அளித்த அவர் உங்களையும் கைவிடமாட்டோம் அவர்களையும் கைவிடமாட்டோம் என பட்டும்படாமல் பேசினாராம். மாற்றுக் கட்சிகளில் இருந்து அனுபமிக்க தலைவர்களை தவெகவில் இணைத்துக் கொள்வது வலிமையை அதிகரிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சியை கட்டி எழுப்ப உழைத்த நிர்வாகிகளின் அதிருப்தியையும் புறந்தள்ளி விடக்கூடாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.














Click it and Unblock the Notifications