அக்-2 முதல் நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை
சென்னை: நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு தடைவிதிக்கப்படும் என்று மத்திய நலத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி அறிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
உலக அளவில் ஆண்டு தோறும் 50 லட்சம் பேர் புகையிலையால் மரணமடைகின்றனர். இதில் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.
உலக அளவில் இந்தியாவில்தான் 60 கோடி இளைஞர்கள் 30 வயதிற்குள் உள்ளனர். இவர்கள் மது, புகையிலை, புகைப் பிடித்தல், நொறுக்குத்தீனி போன்ற உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் தீய பழக்கங்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது.
இதனால் இளம்வயதில் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவை ஏற்படுகிறது. சென்னையில் புகையிலை இல்லாத நிலை வராதா என ஏங்குகிறேன். இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். 2010ம் ஆண்டில் புகையிலை இல்லாத சென்னையை உருவாக்குவோம்.
சினிமா தான் காரணம்:
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் 14.1 சதவீதம் மாணவர்கள் இந்தியாவில் புகைபிடிக்கிறார்கள் என்றும், அடுத்த ஆண்டு 15.1 சதவீதம் பேர் புகைக்கத் தொடங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
52 சதவீதம் இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாக காரணம் சினிமா என்று அந்த ஆய்வு கூறுகிறது.
பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகையிலைகளை விளம்பரம் செய்யக்கூடாது. புகையிலை பொருட்களை கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் 3 ஆண்டுகளாக காகிதத்தில் தான் இருக்கிறது.
ஆனால், இதை எந்த மாநில அரசும் அமல்படுத்துவது மாதிரி தெரியவில்லை. எனவே புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் இந்தியாவில் பொது இடத்தில் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.
எது பொது இடம்?:
பணிபுரியும் இடங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், விடுதிகள், ஹோட்டல்கள், ஓய்வு இல்லங்கள், ரயில் நிலையங்கள், தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், கேண்டீன், விமான நிலையம், பார், காபி ஹவுஸ் உள்பட எங்கும் புகைபிடிக்கக்கூடாது.
அப்படி புகைபிடிக்க வேண்டும் என்றால் தெருவிற்கு சென்றோ, வீட்டிற்கு சென்றோ தான் புகைபிடிக்க வேண்டும். அக்டோபர் 2ம் தேதி முதல் யாராவது பொது இடத்தில் எங்காவது புகைபிடித்தால் அவரை அந்த இடத்தில் வெளியேற்றுவது உங்கள் கடமையாகும் என்றார் அன்புமணி.
சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு தடை கொண்டு வரப்பட்டது. அது தொடர்பான வழக்கில் 2 நீதிபதிகள் வெவ்வேறு விதமாக தீர்ப்பு கூறினார்கள். எனவே அந்த வழக்கு தற்போது தலைமை நீதிபதியின் விசாரணையில் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications