இட்லி, வடை, தோசை விலை குறையுமா-இன்று அறிவிப்பு
சென்னை: ஹோட்டல்களில் இட்லி உள்ளிட்டவற்றின் விலை குறைப்பு குறித்து இன்று அறிவிக்கப்படும் என மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
தமிழக ஹோட்டல்களில் இட்லி, வடை, தோசை, டீ உள்ளிட்டவற்றின் விலை மிகக் கடுமையாக உள்ளது. இதனால் ஹோட்டல்களுக்கு சாப்பிடப் போவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து ஹோட்டல் அதிபர்கள் சங்கத்தினரை வரவழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இட்லி, வடை உள்ளிட்டவற்றின் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இந் நிலையில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹோட்டல் அதிபர்கள் சார்பில் அதன் தலைவர் வசந்த பவன் ரவி, மதுரை வாசன் டிபன் ஹோம் அதிபர் சீனிவாசன், ரத்னாபவன் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஆற்காடு வீராசாமி கூறுகையில், இட்லி, தோசை, வடை, பொங்கல், பூரி, டீ, மதிய சாப்பாடு (பகல் உணவு) ஆகியவற்றின் விலையை குறைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
10 சதவீத அளவுக்கு விலையைக் குறைக்க ஹோட்டல் அதிபர்கள் ஒத்துக் கொண்டனர். ஆனால் கூடுதலாக குறைக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
மற்ற ஓட்டல் அதிபர்களோடு கலந்து பேசி கூறுவதாக தெரிவித்தனர். நாங்களும் முதல்வர் கருணாநிதியோடு கலந்து பேசி, மீண்டும் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும்.
விலை குறைப்பு முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான 3ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
விலையை குறைத்தாலும், உணவின் அளவு, சுவை, தரத்தை குறைக்கக் கூடாது என்று கூறி இருக்கிறோம். கூட்டுகள், சட்னி போன்ற இதர உணவு அளவுகளையும் குறைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளோம்.
ஹோட்டலில் மக்களுக்கு எவ்வளவு எடையில் உணவு வழங்கப்படுகிறது என்பது பற்றிய விவரங்களை உணவுத்துறை மூலம் கணக்கு எடுத்து வைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அந்தந்த ஹோட்டல்களுக்கு பொதுமக்கள் போல் அனுப்பி, அங்கு வழங்கப்படும் உணவு பற்றி ஆய்வு செய்வோம். எதாவது குறைபாடு இருந்தால், அதுபற்றி விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். சைவ உணவு விலை குறைக்கப்பட்ட பிறகு அசைவ உணவு விலை குறைப்பு பற்றி பேசலாம்.
பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறி இருக்கும் நிலையில் ஹோட்டல் உணவின் விலையை கூட்டியதாக தெரிவித்தனர். எனவே, விலையை குறைக்க சில சலுகைகளை கேட்டுள்ளனர். தமிழக அரசுக்கு மத்திய அரசு எந்த விலையில் அரிசி கொடுக்கிறதோ, அதே விலைக்கு தங்களுக்கு அரிசி தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
பாமாயிலை மொத்தமாக இறக்குமதி செய்து வரியில்லாமல் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். ரேஷன் கடைகளில் தரப்படும் பருப்பு வகைகளையும் அதே விலையில் ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கேட்டனர்.
ஹோட்டல்களுக்கு மின்சார கட்டணத்தை குறைக்கும்படி கேட்டனர். அதை குறைக்க முடியாது. வேண்டுமென்றால், மின் உற்பத்தி செய்ய ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் முன்வந்தால், அவர்களுக்கு மின்சாரத் துறை அனைத்து உதவிகள் செய்யும். அவர்கள் காற்றாலை போட்டுக் கொள்வதற்கு வங்கிகள் மூலம் கடன் வாங்கித் தரவும் உதவி செய்வோம்.
இதையெல்லாம் முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும். ஹோட்டல் சங்க அதிபர்களோடு பேசி எவ்வளவு சதவீதம் விலை குறைக்கப்படும் என்பதை முதல்வர் அறிவிப்பார் என்றார்.
பின்னர் வசந்தபவன் அதிபர் ரவி செய்தயாளர்களிடம் பேசுகையில், விலைவாசி ஏறிக்கொண்டே போகும் சூழலில், ஹோட்டல்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனாலும், முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதால், விலையை கொஞ்சம் குறைக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தோம்.
5 முதல் 10 சதவீதம் வரை உணவு விலையை குறைக்க ஒப்புக்கொண்டோம். ஆனால் விலையை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக்கொண்டனர். இதை நிறைவேற்ற முடியுமா? என்பது பற்றி நல்ல முடிவு எட்டப்படும்.
இதையெல்லாம் செய்வதற்கு சில சலுகைகளை எதிர்பார்க்கிறோம். சலுகைகளை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு தரும் சலுகைக்கு ஏற்ப உணவு விலை குறையும். மின்சார கட்டணத்தை காற்றாலை மூலம் பெற்றால் யூனிட் ரூ.2.90-க்கு தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.
இன்று முதல்வருடன் பேசிய பின்னர் விலைக் குறைப்பு குறித்து தெரிய வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications