தோல்வி-டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் ராஜினாமா
ஹைதராபாத்: சமீபத்திய இடைத் தேர்தலி்ல் தோல்விடைந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் பதவியிலிருந்து சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கடந்த மக்களவை-சட்டமன்றத் தேர்தல்களில் தெலுங்கானா பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றது.
ஆனால், தனி தெலுங்கானாவை உருவாக்குவதாக உறுதியளித்து இந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சியில் அமைந்த காங்கிரஸ் பின்னர் ஏமாற்றியதால் இக் கட்சியின் 4 எம்பிக்களும், 16 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
இதையடு்த்து அந்த தொகுதிகளுக்கு கடந்த 29ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
ஆனால், இதில் 2 எம்பி தொகுதிகளிலும் 7 எம்எல்ஏ தொகுதிகளிலும் மட்டுமே அந்தக் கட்சிக்கு வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் 5 தொகுதிகளிலும் வென்றன. எம்பி தொகுதிகளிலும் இந்தக் கட்சிகள் தலா ஒரு இடத்தை கைப்பற்றின.
இதனால் டிஆர்எஸ்சி்ன் செல்வாக்கு தெலுங்கானாவில் சரிந்துவிட்டது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்துள்ளார். இந்தக் கட்சியை உருவாக்கியதே அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் டிஆர்எஸ்-காங்கிரஸ் கூட்டணி?:
இந் நிலையில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற டிஆர்எஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான ஹரீஷ் ராவ் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசினார்.
இவர் சந்திரசேகர் ராவின் உறவினர் ஆவார். இச் சந்திப்பின்போது மீண்டும் டிஆர்எஸ்-காங்கிரஸ் உறவு குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications