மதவாத கட்சி ஆட்சியமைக்க விடக் கூடாது-கருணாநிதி
சென்னை: மதவாதக் கட்சிகள் மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சியமைக்க நாம் அனுமதித்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
அவரது 85வது பிறந்தநாளையொட்டி சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, பிரபுல் படேல், இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், டி.ராஜா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.
அதில் முதல்வர் பேசுகையில், சில காரணங்களால், திமுக கடந்த காலத்தில் சில தோழமை கட்சிகளின் உறவை இழக்க, பிரிய வேண்டிய, தோழமை கட்சிகளுடன் ஒவ்வாமை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மதச்சார்பற்ற அரசு இந்தியாவுக்கு தேவை என்பதை கொள்கையாக கொண்டிருந்ததால், மத நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய அரசு உருவாகும் என்ற நம்பிக்கையோடு அத்தகைய அணியில் எங்களை இணைத்துக் கொண்டோம்.
இதனால் இந்த இயக்கத்தின் அன்பு, ஆதரவுக்கு உட்படுத்திக் கொண்ட, தேர்தல் நேரத்தில் உடன்பாடு செய்து கொண்ட தோழமை கட்சியினரை பிரிய நேரிட்டது. இந்தியாவில் மதச்சார்பற்ற ஆட்சி என்ற நம்பிக்கை நாசம் ஆகும் அளவுக்கு நிகழ்ச்சி நடந்தது. நாங்களும் அதிலிருந்து விலகிக் கொண்டோம்.
சில்லரை பிரச்சினைகள்:
அதன்பிறகு இப்போது தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் திமுக இணைந்து வெற்றிகரமான ஆட்சி நடத்தி வருவதை நாடு காண்கிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. மத நல்லிணக்க கொள்கைக்கு ஏற்படுமா என்னும் அளவுக்கு சில்லரை பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் பெரிய பிரச்சினைகளை விட்டு விடக்கூடாது என்பதை இங்கு வந்துள்ள தலைவர்களுக்கும், அவர்கள் கட்சி தலைமைகளுக்கும் நான் சொல்லி கொள்கிறேன். இது அறிவுரை அல்ல; விருப்பமாக, வேண்டுகோளாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இந்தியாவில் மதச்சார்பற்ற அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் அரசு வந்தால் அது நாட்டையே பாழ்படுத்தி விடும். நாட்டு மக்களை வேட்டையாடி விடும். நாட்டில் அராஜகத்தை உருவாக்கிவிடும். அதனை உணர்ந்து செயல்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அறிஞர் அண்ணா நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடுவது, பலர் தங்கள் உயிரை கொடுத்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் மிச்சம் இருக்கிற பகுதிகளை வென்றெடுப்பது, மதவாத சக்திகள் மீண்டும் மத்திய-மாநில ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.
ஏன் மதவாதம் பற்றி தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றால் சில மதவாத சக்திகள் சில வெற்றிகள் பெற்றுவிட்ட காரணத்தினால் நாட்டில் அவர்கள் ஆட்சி திரும்ப வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை நிறைவேறாமல் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கு உண்டு. ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அதை மறந்து விடக்கூடாது.
உலகம் போற்றும் வகையில் நேபாளத்தில் புரட்சி நடந்துள்ளது. மன்னர் மாளிகை ஏலம் போகுமா? மாளிகையை விட்டு மன்னர் வெளியேறுவாரா என்ற நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது
சேது சமுத்திர திட்டமானாலும் சரி, வேறு எந்த திட்டமானாலும் சரி, மதவாத அடிப்படையில் அவற்றை அணுகுவோம் என்று பா.ஜ.க. தனது தேசிய கூட்டத்தில் சில தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.
பா.ஜ.கவின் 7 பக்க தீர்மானத்தை வாசித்த ஜஸ்வந்த் சிங்கோ அதில், இந்தியன் என்ற முறையில் சனாதன தர்மத்தை நம்புகிறவன் என்ற முறையில் நான் கீழே தள்ளப்பட்டிருக்கிறேன். சனாதன தர்மத்தை விட மேலான மதச்சார்பின்மை வேறு எதுவுமில்லை. இது நேபாளத்தில் நடந்த எதிர்மறையான போக்கு' என்று கூறியுள்ளார்.
நாடு என்னாகும்?:
இடதுசாரி இயக்கங்களும் மற்றும் மதச்சார்பற்ற இயக்கங்களும், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், இங்குள்ள தலைவர்களின் தலைமையில் நடக்கும் முற்போக்கு கட்சிகளும், மதச்சார்பின்மை நேர்மாறான கருத்தினை மதச்சார்பின்மைக்கு பொருளாக ஜஸ்வந்த்சிங் கூறியிருப்பதில் உள்ள ஆபத்தினை உணர வேண்டும்.
தேர்தலிலே மதத்தை அடிப்படையாக வைத்து ஒரு அரசை உருவாக்க அவர்கள் வந்தால் நாடு என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தை, இந்த பிறந்தநாள் விழாவில் செய்வதாக நினைக்கக் கூடாது. இது அடிப்படை பிரச்சினை. தேர்தலுக்காக செய்யப்படும் பிரசங்கம் அல்ல. பிரசாரம் அல்ல. நாளைய இந்தியன் நிம்மதியாக வாழ்வதா? இல்லையா? மதம் என்ற அபினுக்கு அடிமைப்படுவதா? அதிலிருந்து விடைபெறுவதா என்ற அந்த கேள்விக்கு விடை கிடைக்க வேண்டும். எனவே தேர்தல் வெற்றி வேறு.
அந்த தேர்தலால் இந்த தேசத்தில் ஏற்பட போகும் மாற்றம்-எந்த மாற்றமாக இருக்க வேண்டும், அது மதத்தை பயன்படுத்தி, மக்களை மிதிக்கின்ற நிலையில் உள்ளவர்கள் ஆளுகின்ற மாற்றமா? அல்லது எதற்கெடுத்தாலும் மதம் என்று சொல்லி மக்களுடைய வளர்ச்சியை தடுக்கும் நிலையை வீழ்த்துகின்ற மாற்றமா? எந்த மாற்றம் என்பதற்கு விடை காணுங்கள் என்று நான் இந்த பிறந்த நாள் செய்தியாக அறிவிக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications