ஜெவின் 'பொருளாதார தீவிரவாதம்' புகார்-ப.சி. மறுப்பு
சென்னை: இந்திய பங்கு சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு செய்து வருவதாகவும் இதனால் 'பொருளாதார தீவிரவாதம்' உருவாகி வருவதாகவும் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மறுத்துள்ளார்.
ஜெவி்ன் 'பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ்' புகார்:
இந்திய பங்குச் சந்தைகளில் participatory notes (பங்கெடுக்கும் குறிப்புகள் என்னும் பத்திரங்கள்) மூலமான முதலீடு மூலம் வெளிநாட்டினர் தங்களைப் பற்றிய தகவல்கள், உண்மைகளை மறைத்து அதிக அளவில் முதலீடு செய்து வருவதாகவும், இதில் தீவிரவாத அமைப்புகளும் அடக்கம் என்றும்,
இதன் மூலம் இந்தியாவில் பொருளாதார தீவிரவாதம் உருவாகி வருவதாகவும், இதை அறிந்திருந்தும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெ. புரிந்து கொள்ளவே இல்லை:
இந்தப் புகாரை ப.சிதம்பரம் மறுத்துள்ளார். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகார் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறித்து முழுவதுமாக புரிந்து கொள்ளாமலேயே இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார்.
'செபி' கண்காணிக்கிறது:
பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து தேவையான வழிகாட்டுதல்களை, கட்டுப்பாடுகளை இந்திய பங்கு வர்த்தக வாரியமான செபி அமலாக்கி வருகிறது. வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள் அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும்.
1995ம் ஆண்டு செபி நடைமுறை சட்டத்தின்படி அந்த முதலீட்டாளர்கள் 'பார்ட்டிசிபேட்ரி நோட்களை' இந்திய பத்திரங்களுடன் பிணையாக வைத்து வெளியிடலாம், ஆனால் இந்த 'பார்ட்டிசிபேட்ரி நோட்களை' பெறும் நிறுவனங்கள் செபியின் வழிக்காட்டுதல் நெறிமுறைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு மாத இறுதியிலும் வெளிநாட்டு பங்கு நிறுவன முதலீட்டாளர்களின் 'பார்ட்டிசிபேட்ரி நோட்களை' அளிக்கும் நிறுவனங்களின் பெயர் மற்றும் விவரங்களை செபியிடம் அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பங்கு நிறுவன முதலீட்டாளர்களும் அவர்களுடன் இணைந்து தொழில் நடத்துபவர்களும் 'பார்ட்டிசிபேட்ரி நோட்களை' இந்தியாவில் வசிப்பவர்களுக்கோ, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினருக்கோ அளிக்கவில்லை என்ற உறுதி மொழியையும் தர வேண்டும்.
'பார்ட்டிசிபேட்ரி நோட்' எனப்படுவது வெளிநாட்டு பங்கு சந்தையில் வர்த்தகமாகும் பத்திரங்களாகும். ஆகவே இந்திய அரசு, அவர்கள் இதை வெளியிடுவதை தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அதை நம் நாட்டின் விதிமுறைகளின்படி நெறிமுறைப்படுத்த முடியும்.
செபி அமைப்பு இதற்கு தேவையான விதிமுறைகளை அமலாக்கி வருகிறது. இந்த 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' வெளிநாடுகளில் வர்த்தகத்திற்கு உட்படும்போது வெளிநாட்டு விதிமுறைகளின்படி வழி நடத்தப்படும்.
பங்கு சந்தை பரிமாற்றமும் புரியவில்லை:
பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் (sensex) திடீரென ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவது 'பார்ட்டிசிபேட்ரி நோட்கள்' மூலம் தான் என்று ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டு, பங்கு சந்தையில் இந்தப் பத்திரங்கள் மற்றும் அவற்றின் பரிமாற்றங்கள் ஆகியவை பற்றி அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
பங்குச் சந்தை குறியீட்டில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், நாட்டின் பொருளாதாரம், பங்குச் சந்தை குறியீட்டு எண், தொழிற்பிரிவு சாதனைகள் ஆகியவை குறித்த முதலீட்டாளர்களின் கண்ணோட்டத்தின் விளைவே ஆகும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. மேலும் சந்தையில் அன்றாட நிலைமை, பங்குகள் விற்கப்படும் போக்கு, நிறுவனங்களின் செயல்பாடு, எதிர்கால பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினாலும் பங்குச் சந்தை குறியீட்டில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன.
பங்குச் சந்தையில் தீவிரவாத குழுக்களின் நிதியும் குவிகிறது என்ற குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் இது போன்ற குழுக்களின் நிதி எதுவும் நேரிடையாகவோ, ரகசியமாகவோ வந்ததாக அரசுக்கோ அல்லது இவற்றை கட்டுப்படுத்தும் நிறுவனத்துக்கோ தகவல் எதுவும் இல்லை.
தவிர அன்னியச் செலாவணி மற்றும் இந்திய ரூபாய்கள் இது போல பரிமாறப்பட்டால் அவற்றை அன்னியச் செலவாணிச் சட்டங்கள் வாயிலாக தடுக்க முடியும் என்று ஜெயலலிதாவுக்கு விரிவாக விளக்கம் தந்துள்ளது நிதியமைச்சகம்.












Click it and Unblock the Notifications