முல்லைத் தீவில் ராணுவம் முற்றுகை-பிரபாகரனுக்கு குறி?

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இருதரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முல்லைத் தீவில் பதுங்கியுள்ளதாக கூறப்படும் பிரபாகரனின் இருப்பிடத்தை குறி வைத்து பெரும் தாக்குதலை ராணுவம் தொடங்கியுள்ளதாக ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து பொன்சேகா கூறுகையில், இதுவரைஇல்லாத அளவுக்கு முல்லைத் தீவுப் பகுதியில் பலமுனைத் தாக்குதலை ராணுவம் தொடங்கியுள்ளது.
நாங்கள் பிரபாகரனை நெருங்கி விட்டோம். இன்னும் 21 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் முன்னேற வேண்டும். இம்முறை பிரபாகரன் தப்ப முடியாது. அவரை உயிருடன் பிடிக்க தீர்மானமாக உள்ளோம். அந்த நோககுடன்தான் ராணுவம் முன்னேறிவருகிறது.
விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கை மீட்டது போல வடக்கையும் மீட்போம். அதில் ராணுவ வீரர்கள் உறுதியுடனும், மனோ திடத்துடனும் உள்ளனர் என்றார்.
முல்லைத் தீவில் பிரபாகரன் பதுங்கியிருப்பதாக கூறப்படும் 1-4 தளத்தை நோக்கி ராணுவம் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் 56, 57, 58 மற்றும் 59 ஆகிய பிரிவுகள் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வீரர்கள் வரை உள்ளனர்.
முல்லைத் தீவைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிரடிப்படையும் இவர்களுடன் சேரும் என்று கூறப்படுகிறது.
பிரபாகரனை குறி வைத்து ராணுவம் பலமுனைத் தாக்குதலை தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்பு விமானப் படை குண்டு வீச்சில் பிரபாகரன் படுகாயமடைந்திருப்பதாக ராணுவம் கூறியது. ஆனால் அவர் ஆரோக்கியமாக இருப்பது பின்னர் நிரூபணமானது. எனவே பொன்சேகாவின் கூற்று எந்தளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொழும்பி்ல் சார்க் மாநாடு:
இதற்கிடையே இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி வருகிறார். அவர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தி்த்துப் பேசுகிறார்.
வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை கொழும்புவில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டில் பங்கேற்க பிரதமருக்கு அவர் நேரில் அழைப்பு விடு்க்கவுள்ளார்.
இப்போது சார்க் தலைவராக மன்மோகன் சிங் உள்ளார். இதை கொழும்பு மாநாட்டில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவிடம் பிரதமர் ஒப்படைப்பார்.












Click it and Unblock the Notifications