பாமகவை கழற்றி விடுகிறது திமுக!: 4 நாளில் முடிவு!!

அதுகுறித்து நான்கைந்து நாட்களில் திமுக உயர்நிலை குழு கூடி முடிவெடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதால், திமுக கூட்டணியிலிருந்து பாமக கழற்றி விடப்படும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
முரசொலி பத்திரிக்கை ஆசிரியர் சேதுவின் மகன் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. அதில் பாமகவை மிகக் கடுமையாக சாடினார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
திமுக தலைவர்களை மிகக் கடுமையாகத் தாக்கி பாமக முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய சிடியை முதல்வரிடம் தந்த அவர், இனியும் பாமகவை கூட்டணியில் வைத்திருக்கக் கூடாது, உடனே கழற்றி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
சேது வீட்டுத் திருமணம் என்கிறபோது, 'சேது' என்றாலே வரலாற்றிலே இடம் பெறுவது தான். ஏனென்றால் இப்போது சேது இந்தியாவிலேயே ஒரு பிரச்சினை ஆகி விட்ட பெயராக உள்ளது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
எப்படி சேது சமுத்திரத் திட்டம் பிரச்சினையாக இருக்கிறதோ, அதைப் போல சேதுவும் முரசொலியிலே இருக்கிற காரணத்தால், அவருடைய உற்றார், உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு ஒரு பிரச்சினை. இந்த விழாவில் வீராசாமியின் பேச்சின் காரணமாக இந்த சேதுவும் பிரச்சினையிலிருந்து தப்பவில்லை.
வீராசாமி எங்கே பேசினார் என்று கேட்டால், சேது வீட்டுத் திருமணத்திலே என்று தான் சொல்வார்கள்.
அவர் பேசிய விஷயங்கள், இங்கே அவர் அதற்கான சி.டியைக் காட்டிய காரணத்தால், அதிலே உள்ள வாசகங்களையெல்லாம் சொன்ன காரணத்தால், நான் வீராசாமியை நம்புகிறேன், அது உண்மையாகத் தான் இருக்கும்.
உண்மையாக இருக்குமேயானால், அவர் சொன்ன அந்த நடவடிக்கைகளை இந்தக் கழகம் எடுக்க வேண்டுமா, எடுக்க வேண்டாமா? என்ற அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
என்னுடைய தலையை வெட்டினால் என்ன, வீராசாமியின் தலையை வெட்டினால் என்ன, அல்லது ஆண்டிமடம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரின் தலையை வெட்டினால் என்ன, மத்திய அமைச்சர் ராசாவின் தலையை வெட்டினால் என்ன, எல்லா தலைகளை வெட்டும்போதும் வழிகின்ற ரத்தம் தான் என் தலையை வெட்டினாலும் வழியும். (ராசா தலையை வெட்டுவேன் என காடுவெட்டி குரு பேசியதாகக் கூறப்படுகிறது)
இவ்வளவு பெரிய பாதகத்தை, படுகொலையை செய்வதற்குத் தயாராக இருக்கின்ற ஒரு கட்சியினுடைய பெரிய பிரமுகர். அவர் காடு வெட்டினாலும் சரி, மரம் வெட்டினாலும் சரி, மனிதர்களையே வெட்டினாலும் சரி- ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் 'தளபதி' என்று சொல்வார்கள். அந்தத் தளபதியே போருக்குத் தயாராகி விட்டார்.
வெட்டுவார்கள், குத்துவார்கள் என்ற இந்த அச்சுறுத்தல் இன்று நேற்றல்ல, என்னுடைய ஆரம்பகால அரசியலிலேயே நான் கேட்டுக் கேட்டுப் பழகிப் போன வார்த்தைகள். கேட்டுக் கேட்டுப்புளித்துப் போன சொற்கள்.
நான் அப்போதெல்லாம் திருவாரூரிலிருந்து கிளம்பி கூட்டத்திற்குச் சென்று, அங்கே பேசும்போது சொல்வேன் -நான் வீட்டிலிருந்து புறப்பட்டு இங்கே வந்திருக்கிறேன், வரும்போதே வாய்க்கரிசி வாங்கிப் போட்டுக் கொண்டு தான் வந்திருக்கிறேன் என்று தான் சொல்வேன்.
அந்த அளவிற்கு அச்சுறுத்தலும், மிரட்டலும், பீதி காட்டலும் இருந்த கால கட்டம் அது. அன்றைக்கு கடவுளைப் பற்றிப் பேசினாலே, இன்னொரு கட்சியைப் பற்றிப் பேசினாலே அந்தக் கட்சிக்காரர்கள் கத்தி தூக்குவதும், கட்டாரி தூக்குவதும் அவர்களுடைய அரசியல் பாணியாக அப்போது இருந்த காலம். அந்தக் காலத்திலேயே திராவிட இயக்கத்தை நடத்தியவர்கள் நாங்கள்.
தந்தை பெரியார் அவர்கள் அவருடைய சிலையை கடலூரிலே திறந்து வைக்கின்ற விழாவிற்கு வந்திருந்தார். நான் தான் அந்தச் சிலையைத் திறந்து வைத்தேன். இன்னமும் நீங்கள் பார்க்கலாம், கடலூரில், நகரத்தைத் தாண்டி சாலையிலே போய்ச் சேருகின்ற ஒரு வளைவில் கட்டப்பட்டுள்ள மதகின் ஓரத்தில் அய்யா சிலை அமைந்திருக்கிறது.
அந்தச் சிலையை நான் திறந்து வைத்தேன் முதல்வராகச் சென்று. அந்த விழாவிற்கு பெரியாரும் வந்திருந்தார். அப்போது சொன்னார், இந்த இடத்திலே இருபது ஆண்டுகளுக்கு முன் பேசுவதற்காக நான் வந்தபோது, என் மீது செருப்பு வீசினார்கள், அந்தச் செருப்பை நான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்தேன் என்றார்.
இப்படி செருப்படி, கல்லடி, சோடா பாட்டில் வீச்சு, கத்தி வீச்சு, 'கபர்தார்' .. கொலை செய்வோம் என்ற மிரட்டல் இவைகளையெல்லாம் தாண்டித் தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே அமர்ந்திருக்கிறது. எதுவும் பேசுவார்கள்.
இன்றைக்குக் கூட காலையில் அவர்களுடைய தலைவர் நண்பர் ராமதாஸ் பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனர், எங்களுடைய பேச்சையெல்லாம் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். என்ன சாட்சி இதற்கு?.
இப்போதெல்லாம் ஒட்டுக் கேட்க முடியாது. ஒட்டுக் கேட்பதற்கு எத்தனையோ இடங்களிலிருந்து அனுமதி பெற்றாக வேண்டும். மத்திய சர்க்கார், அங்கிருந்து அனுப்புகிற அதிகாரிகள், அந்த அதிகாரிகளிடமிருந்து பெறுகின்ற உத்தரவுகள், அனுமதிகள் இவ்வளவிற்கும் பிறகு தான் டெலிபோனில் ஒருவர் பேசினால் அதை ஒட்டுக் கேட்க முடியும்.
ஓட்டுக் கேட்பதென்றால் அது சாதாரணம். யார் வேண்டுமானாலும் ஓட்டு கேட்கலாம். நான் முதலமைச்சராகப் போகிறேன், ஆகவே எனக்கு ஓட்டுப் போடு என்று ஓட்டு கேட்கிற விவகாரம் வேண்டுமானால் இன்றைக்கு சாதாரணம். ஆனால், ஒட்டுக் கேட்பது அவ்வளவு சாதாரணமல்ல.
இப்போது வீராசாமி இங்கே காட்டிய அந்த சி.டி. கூட ஒட்டுக் கேட்டு எடுக்கப்பட்ட சி.டியாக எனக்குத் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியிலே பேசியதை முறைப்படி பதிவு செய்து அதை இவரிடம் ஒரு நண்பர் கொண்டு வந்து கொடுத்து, அதைத் தான் இங்கே எடுத்துக் காட்டியிருக்கிறார். சி.டியை போட்டுக் காட்டவும் தயாராக இருப்பதாகச் சொன்னார்.
ஆனால் அதிலே உள்ள விஷயங்கள் எவ்வளவு ஆபத்தானவை, எவ்வளவு பயங்கரமானவை எப்படிப்பட்ட கொலை சதி நடைபெற்று அந்தச் சதியின் காரணமாக வெளியிடப்பட்டவை- அந்தச் சதிக்கு உடந்தையாக உட்கார்ந்து பேசியவர்கள் எல்லாம் யார் யார்- இவைகள் எல்லாம் அவர் அந்த சி.டியை என்னிடம் தந்த பிறகு, அதை நம்முடைய உயர்நிலை செயல் திட்டக் குழுவிலே வைத்து, ஒலி பெருக்கச் செய்து, அதைக் கேட்டு, அதற்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை நாம் எடுப்போம்.
அந்த நடவடிக்கை நான் முதலமைச்சர் என்ற முறையிலே அரசு நம் கையிலே இருக்கிறது என்ற முறையிலே அல்ல, பொதுவாக யாராக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு அமைதி இவைகளுக்காகப் பாடுபடுகின்ற அந்த நோக்கத்தின் அடிப்படையில் அதை நான் எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி காவல்துறையினரிடம் கொடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டுமென்று கொடுப்பேன்.
இப்படிப்பட்ட கட்சியோடு எவ்வளவு நாள் உறவு என்று வீராசாமி கேட்டார். கேட்டவர் கட்சியின் பொருளாளர். அதைக் கேட்டவர் கட்சியின் தலைவர். இவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறோம்.
நாங்கள் உங்களுக்கு அளிக்கின்ற உறுதிமொழி, இன்னும் நான்கைந்து நாட்களில், கடலூர் மாநாடு முடிந்த பிறகு நம்முடைய கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழுவினை கூட்டி, வீராசாமி இவர்களோடு உறவு நீடிக்க வேண்டுமா என்று கேட்டாரே, அந்தக் கேள்விக்கான பதிலை ஐந்தாறு நாட்களில் அளிப்பேன்.
ஏனென்றால் இவ்வளவு வன்முறைகளை, இவ்வளவு கடுமையான சொற்களை தாங்கிக் கொண்டு தான் ஒரு கூட்டணியிலே இருக்க வேண்டும் என்றால் அதை விட அவமானம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
அந்த அவமானத்தை எப்படித் துடைப்பது என்பதற்கு நம்முடைய கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழுவிலே முடிவெடுப்போம் என்று ஆற்காட்டாருக்கு ஆறுதலாக இதைச் சொல்லி, அவருக்குச் சொன்னதின் மூலம் உங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கும் ஆறுதலைச் சொல்லி அமைதியாக இதை அணுக வேண்டும், இதைப்பற்றி யாரும் அவரவர் வாய்க்கு வந்தவாறெல்லாம் பேசக் கூடாது.
உண்மை நிலை தெரிகிற வரையில், இதைப் பற்றி விமர்சிக்கக் கூடாது, நாம் அதற்குரிய நடவடிக்கை எடுக்கிற வரையில் அந்த நடவடிக்கை, எந்த நடவடிக்கையாக எந்த முடிவாக இருந்தாலும், ஒத்துழைக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, மணமக்களே எங்களை மன்னியுங்கள்.
உங்களை வைத்துக் கொண்டு உங்களுடைய வாழ்வு எப்படியெல்லாம் ஒளிமயமாகத் திகழ வேண்டுமென்று பேசுவதற்குப் பதிலாக, எங்களைப் பற்றிப் பேச வேண்டிய ஒரு நிலைமை வந்து விட்டதே என்பதற்காக வருத்தப்படுகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications