கிருஷ்ணகிரியில் தேமுதிக நிர்வாகி படுகொலை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தேமுதிக ஆட்டோ ஓட்டுநர் சங்க பொருளாளர் ராஜா என்பவர் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை ரோட்டில் உள்ள காமராஜ்நகரை சேர்ந்தவர் ராஜா (27). இவர் ஆட்டோ டிரைவர். தே.மு.தி.க. நகர ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பவளக்கொடி (25) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பவளக்கொடி ஏற்கனவே திருமணமாகி, கணவனால் கைவிடப்பட்டவர். 2-வதாக ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கவிதா (4), சுந்தர் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காமராஜ்நகர் பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் குடியிருந்து வந்தார். ராஜா தொழிலுக்கு சென்றவுடன் தனி வீட்டில் இருக்க பவளக்கொடிக்கு பயமாக இருந்தது. இதனால் பவளக்கொடி கடந்த சில மாதங்களாக கிருஷ்ணகிரி கோர்ட்டு அருகே உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.
ராஜா ஆட்டோ ஓட்டி விட்டு சாப்பாட்டிற்கு மட்டும் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு, இரவு தூங்குவதற்கு தனது வீட்டுக்கு சென்று விடுவார். வழக்கம்போல் நேற்று முன்தினமும் தூங்குவதற்காக தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், நேற்று காலை கணவர் ராஜா சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பவளக்கொடி வீட்டுக்கு சென்றார். அங்கு ராஜா தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதைப்பார்த்த பவளக்கொடி அலறியடித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications