பெண்கள் இடஒதுக்கீடு: இனியும் தாமதம் கூடாது-அதிமுக
சென்னை: பெண்களுக்கு 33 ததவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதில் இனியும் தாமதம் கூடாது என அதிமுக கூறியுள்ளது.
கடலூரில் திமுக மகளிர் அணி மாநாடு நடந்து வரும் நிலையில் அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியப் பெண்கள் அரசியலில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளனர். விளையாட்டு துறையில் சிறந்த சாதனை படைத்துள்ளனர். விண்வெளிக்கு கூட சென்று விட்டனர். ராணுவம் போலீஸ், அதிரடிப்படை போன்ற துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பணியாற்றி வருகிறார்கள்.
கல்வியிலும் ஆண்டு தோறும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெறுகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க பெண்களுக்கு எதிரான சில அம்சங்களும் இருப்பதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தாயின் வயிற்றில் இருக்கும்போதே பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றன. தவறான உறவில் பிறந்த குழந்தைகள் ஒரு சில நிமிடத்திலேயே கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.
இந்திய பெண்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே படித்தவர்கள். ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் உழைக்கிறார்கள். அவர்கள்தான் அதிக சுமையை சுமக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் விவசாயத் துறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது உள்ள அரசு அதை கடைபிடிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் உள்ள இடங்களில் இப்போது பெண்களுக்கான இடம் 8 சதவீதம் மட்டுமே. 6 சதவித பெண்களே அமைச்சர்களாக உள்ளனர். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் 4 சதவீதத்துக்கும் குறைவான பெண்களே நீதிபதிகளாக உள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்ந்து வந்தாலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் அந்த வளர்ச்சி பிரதிபலிக்கவில்லை. 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 539 வேட்பாளர்களில் 44 பேர் மட்டுமே பெண்கள். இது வெறும் 8 சதவீதம்தான்.
இதைக் கருத்தில் கொண்டு தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக வற்புறுத்துகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இதை நிறைவேற்ற முன் வர வேண்டும். இதில் இனியும் தாமதம் கூடாது.
இந்த பெண்கள் இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் தலித்துக்கள், பிற்பட்ட வகுப்பினர், முஸ்லீம்கள், மற்றும் இதர சிறுபான்மை பிரிவினருக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விடும் என்று சில அரசியல் கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்.
மேலும், ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான 22.5 சதவீத இட ஒதுக்கீட்டுடன் பெண்களுக்கான 33.3 சதவீத இட ஒதுக்கீடும் சேர்த்து கொண்டால் மொத்த இட ஒதுக்கீடு 55 சதவீதத்துக்கும் அதிகமாகிவிடும், இது மற்ற பிரிவினருக்கு போதுமானதாக இருக்காது என்பதை இந்தக் கட்சிகள் இன்னொரு காரணமாக சொல்கின்றன.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டுக்கும் பொருந்தும் என்பதே அதிமுகவின் கருத்து.
உதாரணமாக தலித்துக்களுக்காக 30 இடங்கள் ஒதுக்கப்பட்டால் அதில் உள் ஒதுக்கீடாக 10 இடங்கள் தலித் பெண்ணுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம் சமூதாயத்தில் அனைத்து பிரிவிலும் உள்ள பெண்களுக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வழி ஏற்படும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் போது பிராந்திய வாரியாகவோ தொகுதி வாரியாகவோ பாரபட்சம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதை உறுதி செய்யும் வகையில் தனி தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தான் சமூதாய வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் பெண்களுக்கு நாம் அளிக்கும் கெளரவம் ஆகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications