சில்மிஷ தலைமை ஆசிரியரை நீக்கியது சரிதான்: உயர்நீதிமன்றம்
சென்னை: பள்ளிச் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை டிஸ்மிஸ் செய்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சென்னை நவோதாயா பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் முருகேசன். சில ஆண்டுகளுக்கு முன் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த ஒரு அப்பாவி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
சிறுமியின் தந்தை அதே பள்ளியில் டிரைவராக வேலை பார்த்த்தால், பள்ளி வளாகத்திலேயே இருந்த ஒரு வீட்டில் குடியிருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட தலைமை ஆசிரியர் முருகேசன், யாருமில்லா நேரத்தில் வீட்டுக்கே போய் அச்சிறுமியிடம் செக்ஸ் சித்ரவதை செயதிருக்கிறார்.
கடந்த 2002-ம் ஆண்டு, அக்டோபர் 27-ம் தேதி தலைமை ஆசிரியரின் தொல்லை எல்லை மீறிப் போகவே, அந்த மாணவி கூச்சல் போட்டு விஷயத்தை அக்கம் பக்கத்திலிருந்த எல்லோரிடமும் கூறிவிட்டாள்.
விஷயம் போலீசுக்குப் போனது. உடனே சுதாரித்துக் கொண்ட முருகேசன், இதிலிருந்து தப்பிக்க தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் தனக்கு ஆதரவாகக் கடிதங்கள் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து அறிய தனியாக ஒரு விசாரணை நடத்தப்பட்டது. இதில் முருகேசன் ஏற்கெனவே பலமுறை பலரிடம் இதே மாதிரி செக்ஸ் சில்மிஷம் செய்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் தன்னை நீக்கியது செல்லாது என்றும் தலைமை ஆசிரியர் என்ற முறையில் தனக்கு முழுமையான பலன்களைத் தரவேண்டும் என்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார் முருகேசன்.
உடனே முருகேசனின் நீக்கத்தை மறுபரிசீலனை செய்த தீர்ப்பாயம், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தங்களை நம்பி பள்ளிக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட முருகேசனை டிஸ்மிஸ் செய்தது சரியே என்றும், அதை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாவது:
பத்தாம் வகுப்பு சிறுமியிடம் தலைமை ஆசிரியர் முருகேசன் செய்த செக்ஸ் கொடுமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விசாரணையிலும் அதை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமல்ல, செய்த தவறை மறைக்க தனக்கு சாதகமாக சாட்சிகளை உருவாக்கவும் அவர் முயன்றிருக்கிறார்.
அப்படியிருக்க அவர் மீது எந்த நடவடிக்கையுமே வேண்டாம் என்றால் எப்படி? குற்றவாளி தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். அவருக்கான ஓய்வுகால பலன்களையும் கூட நிறுத்தி வைப்பதுதான் சரியானது.
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் போக்கு, சட்டத்துக்குப் புறம்பாக எப்படியாவது முருகேசனை மீண்டும் பணிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதாகவே உள்ளது. இது ஆரோக்கியமானதல்ல என்று கூறியுள்ளனர்.
--












Click it and Unblock the Notifications