இடதுசாரிகள் விலகினால் முலாயம் ஆதரவை நாட காங். முடிவு

அணு சக்தி ஒப்பந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை இருந்ததை விட இடதுசாரிகளின் நிலையில் தற்போது பிடிவாதம் கூடியுள்ளது.
அதேசமயம், மத்திய அரசும், தனது நிலையை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. இடதுசாரிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவருகிறது. இதனால் இடதுசாரிகள், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 25ம் தேதியன்று இதுகுறித்து உறுதியாகவும், இறுதியாகவும் தெரியவரும்.
இதையடுத்து அரசைக் காக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இறங்கியுள்ளது.
முதல் கட்டமாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் ஆதரவை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், காங்கிரஸ் இறங்கியுள்ளது
தேசியவாதக் கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம், திமுக, பாமக, லோக் ஜன சக்தி கட்சி உள்ளிட்டவை தற்போது காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளன. இந்தக் கட்சிகள் அனைத்தும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதைத் தவிர இன்னொரு முக்கிய முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கவுள்ளது. அது, முலாயம் சிங்கின் ஆதரவைப் பெறுவது.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 3வதுஅணியின் முக்கிய தலைவராக முலாயம் சிங் யாதவ் இருக்கிறார். மேலும், இடதுசாரிகளுடன் இணைந்து 3வது அணியை வலுவானதாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இவரது உதவியை காங்கிரஸ் நாட தீர்மானித்துள்ளது. முலாயம் சிங்கின் ஆதரவைப் பெற்றால், ஆட்சி கவிழ்வதைத் தடுக்க முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.
விரைவில் சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங்கை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர். தங்களது ஆதரவை காங்கிரஸ் நாடினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என சமாஜ்வாடிக் கட்சியும் தெரிவித்துள்ளது.
தற்போது லோக்சபாவில் சமாஜ்வாடிக் கட்சிக்கு 39 எம்.பிக்கள் உள்ளனர். இடதுசாரிகளுக்கு 59 பேர் உள்ளனர். இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால், முலாயம் சிங் ஆதரவு தர முன்வந்தால், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்.
இதுதவிர தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாளம், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் ஆகியவையும் ஆதரவளிக்கக் கூடும். இதுதவிர 6 சுயேச்சைகளும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவளித்தால், ஆட்சி கவிழும் அபாயம் நீங்கும். இன்னும் சொல்லப் போனால் பெரும்பான்மையை விட கூடுதலாக 12 எம்.பிக்களின் ஆதரவு இருக்கும்.
இந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து தற்போது காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.
ஆனால் இப்படி கூட்டாஞ்சோறாக ஆதரவைத் திரட்டினால், அது நித்தியகண்டம் பூரணாயுசு கதையாகத்தான் இருக்கும் என்பதால் இடைத் தேர்தலையும் காங்கிரஸ் தனது திட்டத்தில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஜூன் 25ம் தேதிக்குப் பிறகு பல்வேறு பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications