தமிழகம்- 13 ரயில்களின் நேரங்கள் மாற்றம்
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் 13 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு இந்த கால அட்டவணையை வெளியிட்டார். அதை தெற்கு ரயில்வே சென்னை உதவி பொது மேலாளர் மிஸ்ரா பெற்றுக் கொண்டார்.
அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் 13 ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். தற்போது இந்த ரயில், தினசரி இரவு 9.30 மணிக்குப் புறப்படுகிறது.
தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். தற்போது இது 6.30 மணிக்கு புறப்படுகிறது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இனிமேல் இரவு 8.50 மணிக்குப் புறப்படும். தற்போது இந்த ரயில், இரவு 9 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.
இதுதவிர பெங்களூர் - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்புக் குகோவை பகுதியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் அதையும் மீறி எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கோவை -கும்பகோணம் ஜன சதாப்தி ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சில ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு பேசுகையில், தெற்கு மண்டல ரெயில்வே துறை மிக சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது இம்மண்டலத்தின் கீழ் புதிதாக 11 ரெயில்கள் இயக்கப்படவுள்ளன. தற்போது இயங்கி வரும் 6 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 ரெயில்களின் நடை அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 ரெயில்களின் கால நேரம் மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக மதுரை, நெல்லை, செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில் புதிய பயணிகள் ரெயில் போக்குவரத்து நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் துவக்க விழா நாளை நடைபெறுகிறது.
எழும்பூரிலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரசின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் 35 நிமிடங்கள் குறையும்.
சென்னையை பொறுத்தவரை பறக்கும் ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 6லிருந்து 9ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 78,598 பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர்.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் - செங்கல்பட்டு நோக்கி செல்லும் அகல பாதை ரெயில்களில் நெரிசல் நேரத்தின்போது, 12 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் காலையில் 3 முறையும், மாலையில் 4 முறையும் பயணிக்கும். இடைப்பட்ட நேரங்களில் 11 ரெயில்கள் செயல் பாட்டில் இருக்கும்.
பேருந்து கட்டண அதிகரிப்பால், ஒரு லட்சம் பயணிகள் கூடுதலாக ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதனால் கூடுதல் கவுண்டர்கள், இடநெருக்கடி போன்றவை ஏற்படுகிறது. அவற்றை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
சென்னை-சேலம் புதிய ரயில்:
இதுதவிர சென்னை எழும்பூர்- சேலம் இடையிலான புதிய ரயில் சேவை நாளை தொடங்குகிறது.
சென்னை-பெங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஸ்ரீ சத்யசாய் பிரசாந்தி நிலையம் வரை நீட்டிக்கப்படுகிறது. மதுரை-மானாமதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகிறது.
தூத்துக்குடி -திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்,திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படுகிறது.
டெல்லி-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், வாரம் இருமுறை என்பதிலிருந்து 3 முறை என மாற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications