தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு கொலை மிரட்டல்
சென்னை: பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் செயல்படும் உங்களை கொலை செய்வேன் என்று கூறி ஜெயபாலன் என்ற பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
நரேஷ்குப்தாவின் வீடு மேற்கு அண்ணா நகர் எம்எம்எம் மருத்துவமனை அருகே உள்ளது. இங்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், நான் எஸ்.ஜெயபாலன். நீங்கள் திமுகவுக்கு விரோதமாகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறீர்கள். எனவே உங்களையும் கொன்று, உங்கள் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி சுகாதாரத் துறையில்அடிப்படை சுகாதாரப் பணியாளராக பணியாற்றும் ஜெயபாலன் என்பவரின் அடையாள அட்டையின் முன்பக்க, பின்பக்க நகல்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து டிஜிபியிடம் நரேஷ் குப்தா புகார்செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஜெயபாலன் என்பவர் தற்போது பணியில் இல்லை. அவர் கடந்த ஆண்டே ஓய்வு பெற்று விட்டார்என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்தான் இந்த கடிதத்தை அனுப்பினாரா அல்லது வேறு யாரேனும் ஜெயபாலனின் பெயரைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
