தெலுங்கானாவில் 'ஆந்திரா மீல்ஸுக்கு' தடை!
ஹைதராபாத்: தெலுங்கானா பகுதியில் ஆந்திரா மீல்ஸ் சாப்பாட்டை வழங்கக் கூடாது என ஹோட்டல்களுக்கு தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி போராடி வருகிறது.
இந் நிலையில் இந்தக் கட்சி புதிய போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. அதாவது, தெலுங்கானா பகுதியில் உள்ள ஹோட்டல்களில் ஆந்திரா மீல்ஸ் சாப்பாட்டை விற்கக் கூடாது என இக்கட்சி எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதைடுத்து இழந்த பெயரை மீண்டும் பெறும் வகையில் இப்புதிய போராட்டத்தை தொடங்கியுள்ளது.
தெலுங்கானா பகுதியில் உள்ள ஹோட்டல்களில் இனிமேல் "ஆந்திரா மீல்ஸ்' விற்பனை செய்யக்கூடாது' என, ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
சங்கர் ரெட்டி என்ற நகரில் இந்த போராட்டம் துவங்கியது. ஏராளமான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் ஒவ்வொரு ஹோட்டலாக சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள 'இங்கு ஆந்திரா மீல்ஸ் கிடைக்கும்' என்ற அறிவிப்பு பலகையை அகற்றக் கோரினர்.
மேலும், ஆந்திரா என்ற வார்த்தையே விரும்பத்தகாத வார்த்தை என, அவர்கள் கூறி வருகின்றனர்.
இதுபற்றி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ய நாராயணா கூறுகையில், தெலுங்கானா மக்களுக்கு கலாசார ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த போராட்டத்தை துவக்கியுள்ளோம்.
ஆந்திரா சாப்பாட்டை சாப்பிடும்படி, தெலுங்கானா மக்களை யாரும் வற்புறுத்தக் கூடாது. எங்கள் உத்தரவை செயல்படுத்த தவறும் ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
இதனால் தெலுங்கானா பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள், பிற கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications