ஆட்டோ கவிழ்ந்து வேல்கள் பாய்ந்து பக்தர் சாவு
விழுப்புரம்: கோயில் திருவிழாவில் வேல் காவடி எடுத்த பக்தர் வீடு திரும்பியபோது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் உடலில் ஏராளமான வேல்கள் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜமால் சவுக்கார் தெருவை சேர்ந்தவர் தீனன் (42). பம்ப் ஸ்டவ் கம்பெனி உரிமையாளர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு லதா (15), பிரபு (12) என்ற குழந்தைகள் உள்ளனர்.
தீனன், அம்மன் கோயில் திருவிழாக்களில் உடலில் வேல், அலகு குத்தி காவடி எடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கருமாரி அம்மன் கோயில் ஆடி திருவிழாவில் காவடி எடுப்பதற்காக தீனன், தனது நண்பர்கள் வேலு, நந்தகுமார், வரதன், ராஜேந்திரன், ஜோதி ஆகியோருடன் ஷேர் ஆட்டோவில் நேற்று முன்தினம் சென்றார்.
அங்கு காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார். பின்னர் தீனன், காவடியில் இருந்த வேல் கம்புகளை தனியாக எடுத்து ஆட்டோவின் பின்னால் வைத்துக் கொண்டு, சென்னைக்கு புறப்பட்டனர்.
விழுப்புரம் அருகே கூட்டேரிப்பட்டு மெயின்ரோட்டில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், தனியாக கட்டி வைக்கப்பட்டிருந்த வேல்கள் தீனனின் உடலில் தாறுமாறாக குத்தின. வயிறு, மார்பு, கழுத்து, முகம் என பல இடங்களில் வேல் குத்தி துளைத்தது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தீனன் துடிதுடித்து இறந்தார்.
அவருடன் சென்ற அவரது நண்பர்கள் வேலு, பரதன், நந்தகுமார், ஜோதி, ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
