வெற்றி அரசுக்கு-லாபம் திமுகவுக்கு!
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அலேக் ஆக தப்பிப் பிழைத்திருப்பதால் மற்ற கூட்டணிக் கட்சிகளை விட திமுகவுக்கே பெரிய லாபம் என்று கணிக்கப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டது. அரசு பிழைத்து விட்டது. மாயாவதி தலைமையில் திரண்ட இடதுசாரிகள், 3வது அணி கட்சிகள் 'அப்செட்'டில் இருக்கின்றனர். ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி ஒரே ஒரு கட்சி மட்டும் 'அப்பீட்' மூடில் இருக்கிறது-அது திமுக.
16 எம்.பிக்களை கொண்டுள்ள திமுக 6 மத்திய அமைச்சர்களைப் பெற்றிருக்கிறது. கனிமொழியும் சேர்ந்தால் இது உயரும். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வென்றிருப்பதால் திமுக சந்தோஷமடைய முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அது- சேது.
சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றி விடுவது என்பதில் முனைப்பாக இருக்கிறது திமுக. இன்னொரு பிரச்சினையையும் அது தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அது - ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
இந்த இரண்டுமே தமிழகம் சம்பந்தப்பட்ட திட்டங்கள் மட்டுமல்லாமல், திமுகவின் கெளரவம் சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதால் காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற கருத்தில் உள்ளது திமுக.
இதை மனதில் கொண்டே அதிரடியாக டெல்லிக்குப் பறந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. அங்கு பிரதமரை சந்தித்த அவர் இந்த இரு திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வென்றதில் தமிழகத்திற்கும் ஒரு நல்ல விஷயம் அடங்கியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் உதவி எந்த அளவுக்கு தேவை என்பதை இப்போது காங்கிரஸ் வெகு நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு எம்.பியையும் இழுக்க அது பட்ட பாடு ஆயுசுக்கும் மறக்காது.
எனவே மிகப் பெரும் பலமாக இருக்கும் திமுகவின் கோரிக்கைகளுக்கு நிச்சயம் மத்திய அரசிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வராது என்பதால் தமிழகத்திற்கு சில நல்ல காரியங்கள் நடக்காலம் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக ஓகனேக்கல் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முழுமையான அளவில் தமிழகத்திற்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதேசமயம், திமுகவுக்கு இன்னொரு வசதியும் தற்போது ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்கு தர வேண்டிய கட்டாயம் நீங்கி விட்டதே அது. ஒரு வேளை காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கினால், ஆதரவு வாபஸ் என்ற அம்பை எய்யலாம் என்ற ஒரு சாய்ஸ் இருப்பதால், தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து நெருக்கடிகள் குறையும் என திமுக எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே, மத்திய அமைச்சரவையில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றத்தின்போது தற்போதுள்ள சிலரின் பதவி பறிக்கப்படலாம், சில புதியவர்கள் சேர்க்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
களையெடுக்கப்படப் போகிறவர்கள் யார், சேரப் போகிறவர்கள் யார் என்ற பேச்சு டெல்லியில் சூடாக கிளம்பியுள்ளது.
தமிழகத்திற்கு சில புதிய அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் வழக்கம் போல முதலில் கிசுகிசுக்கப்படுகிறவர் கனிமொழி. நீண்ட காலமாகவே கனிமொழி அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால்அதற்கான காலம் இன்னும் கனியவில்லை போலும்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். லேட்டஸ்டாக தலைவரான தங்கபாலுவுக்கும் அமைச்சர் பதவி மீது ஒரு கண் இருக்கிறது.
அதை விட முக்கியமாக மதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு பதவி கிடைக்கக் கூடும் என்றும் பேசப்படுகிறது.
எல்.ஜி, செஞ்சியாரை இழுத்து வந்தது திமுக என்பதால் அக்கட்சிக்கும் போனஸ் தரப்படலாம்.
தற்போது திமுகவின் எம்.பிக்கள் கணக்கை 16 என்பதற்குப் பதில் செஞ்சியாரையும், எல்.ஜியாரையும் சேர்த்து 18 ஆகவே டெல்லி வட்டாரத்தில் திமுக கணக்குகாட்டியுள்ளது. அதை வைத்து கூடுதலாக அமைச்சர் பதவிகளை அது எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
முதல்வரின் டெல்லி பயணத்தின்போது இந்த விவகாரம் எல்லாம் பிரதமர் மற்றும் சோனியா காந்தியுடன் ஆலோசிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications